தர்மபுரி:அதிக வட்டி தருவதாகநிதி நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாய் ஏமாற்றிய தனியார் நிறுவனத்தின் அலுவலககதவை உடைத்து பொருளாதார குற்றப்பிரிவுபோலீசார் சோதனை செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையானுாரை சேர்ந்தவர் ராஜா; இவரது மகன்கள் அருண்ராஜ் 37 ஜெகன்ராஜ் 30; இருவரும் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு கடந்த 2021 முதல் 'பர்பெக்ட் விஷன் சிட்ஸ்' என்ற நிதி நிறுவனத்தை நடத்தினர்.
இதில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 1800 என 100 நாட்களில் 1.80 லட்சம் ரூபாய் திருப்பி தரப்படும் என ஆசை வார்த்தை கூறி விளம்பரங்களை வெளியிட்டனர்.
இதை நம்பி தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பலர் முதலீடு செய்தனர். அவர்களுக்கு கடந்த 2022 மே 26 வரை கூறிய படி பணம் வழங்கப்பட்டது.
அதிக வருவாய்க்கு ஆசைப்பட்ட பலர் பல கோடி ரூபாய் வரை மீண்டும் இவர்களிடம் முதலீடு செய்தனர். இந்நிலையில் அவர்கள் அருண்ராஜ் ஜெகன்ராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை. தர்மபுரியிலுள்ள தலைமை அலுவலகம் ஏலகிரி ஓசூர் போச்சம்பள்ளி கிளை அலுவலகங்களுக்கு சென்றபோது அங்கு அலுவலகங்கள் மூடியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பலர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சிவக்குமார் தர்மபுரி இன்ஸ்பெக்டர் கற்பகம் மற்றும் போலீசார் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையானுாரிலுள்ள அருண்ராஜ் ஜெகன்ராஜ் வீட்டில் சோதனையில் ஈடுபட்டதுடன் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் தர்மபுரியில் செயல்பட்ட நிதி நிறுவன தலைமை அலுவலகத்தில் சோதனையிட சென்றபோது பூட்டியிருந்ததால் அலுவலக பூட்டை உடைத்து சோதனையிட்டனர்.
இதில் அருண்ராஜ் ஜெகன்ராஜ் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து அதிக வட்டி தருவதாக பணம் பெற்றவர்களின் விபரங்கள்உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரித்துவருகின்றனர்.