கடலுார் : அறுவடை இயந்திரத்தை பறிமுதல் செய்ததால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ. 12. 84 லட்சம் திருப்பித் தர தனியார் வங்கி நிர்வாகத்திற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் மேல்நெடும்பூரை சேர்ந்தவர் நடனசபாபதி மனைவி புலமைச்செல்வி, 56; இவர், கும்பகோணத்தில் உள்ள இண்டஸ்இண்ட் வங்கியில் கடன் பெற்று, கடலுாரில் உள்ள ஸ்ரீமகாலட்சுமி டிராக்டர்ஸ் என்ற டீலரிடம் 2022ம் ஆண்டு டிராக்டர் வாங்கினார்.
டிராக்டருக்கான முன்பணம் செலுத்தும் போது, காப்பீடு மற்றும் வாகனப் பதிவை மேற்கொள்வதாக டீலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், காலதாமதமாக வாகனப் பதிவு செய்யப்பட்டது. டிராக்டருக்கு முதல் தவணை செலுத்திய நிலையில், 2ம் தவணை செலுத்தவில்லை எனக் கூறி டிராக்டரை வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்தது.
அப்போது, புலமைச்செல்வி சொந்த செலவில் வாங்கிய அறுவடை இயந்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்ட புலமைச்செல்வி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய நுகர்வோர் கோர்ட் நீதிபதி கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் அடங்கிய அமர்வு, வாகன பதிவில் தாமதம் ஏற்படுத்திய டிராக்டர் டீலரும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காக வங்கியும் புலமைச்செல்விக்கு தலா 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், பறிமுதல் செய்த அறுவடை இயந்திரம் மற்றும் இதர செலவுக்காக புலமைச்செல்விக்கு வங்கி நிர்வாகம் 12 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயை திருப்பித் தர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.