நாகப்பட்டினம் : மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம், மேல வீதியில், உள்ள தனியார் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில், 30 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த மையத்திற்கு 2023ம் ஆண்டு முதல் 2029 ம் ஆண்டு வரை இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த மையத்தில் திருவாரூர் மாவட்டம் கரையங்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், 47; என்ற தொழிலாளி சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து தப்பிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் மணிகண்டன், மேலாளர் வேல்முருகன் மற்றும் பணியாளர்கள் முருகேசனை தூணில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த முருகேசன் இறந்தார்.
இந்நிலையில், முருகேசன் கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டதாகவும், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்து விட்டதாகவும், வேதாரண்யம் போலீஸ் ஸ்டேஷனில், மையத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த எஸ்.பி., ஹர்ஷ் சிங் மறுவாழ்வு மையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் முருகேசன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக வேதாரண்யம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிகிச்சை மைய உரிமையாளர் மணிகண்டன், 36, மேலாளர் வேல்முருகன், 38, பணியாளர்கள் ஷாம் சுந்தர், 35, தீபக் குமார், 33,ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும் மறுவாழ்வு மையத்தில் காயத்துடன் இருந்த சரண்ராஜ், 32, பிரபாகரன், 35, பாலமுருகன், 25, ஆகிய மூவரையும் போலீசார் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மற்றவர்களை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த போலீசார், மறு வாழ்வு மையத்திற்கு சீல் வைத்தனர்.