விழுப்புரம் : விழுப்புரம் மார்க்கெட் ரோட்டில் நேற்றிரவு வியாபாரியை தாக்கி, பணத்தை பறித்த இரு வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் கமலா நகர் கைவல்லியர் தெருவை சேர்ந்தவர் ஜியா உல் ஹக், 39; தின்பண்ட வியாபாரி. நேற்று இரவு 9:30 மணிக்கு கடைகளுக்கு தின் பண்டங்கள் வழங்க பைக்கில், விழுப்புரம் மார்க்கெட் (எம்.ஜி.,) ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலை நடுவே நின்றிருந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த இரு வாலிபர்கள், ஜியா உல் ஹக்கை மறித்து தாக்கி, அவர் வைத்திருந்த பணப்பையை பறித்தனர்.
அதனைக் கண்ட பொதுமக்கள், தாக்குதலில் ஈடுபட்ட இரு வாலிபர்களை பிடித்து வைத்து கொண்டு, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஜியா உல் ஹக்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த இரு வாலிபர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.