'கொடை' 11வது வார்டில் கொடிகட்டி பறக்கும் பிரச்னைகள்
கொடைக்கானல்--போதை பொருட்கள் தாராளம், தீப்பொறி கக்கும் டிரான்ஸ்பார்மர் என கொடைக்கானல் நகராட்சி 11 வது வார்டில் பிரச்னைகள் கொடிகட்டி பறக்கின்றன.
பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், சலேத்மாதா சர்ச், அந்தோணியார் சர்ச், உட்வில் ரோடு, செம்மேரிஸ் ரோடு, நாய்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் சேதமடைந்த ரோடுகளால் தினமும் மக்கள் பாதிக்கும் நிலை தொடர்கிறது.
காட்டு மாடு நடமாட்டத்தால் வெளியே நடமாடவே அஞ்சுகின்றனர் வார்டு மக்கள் . தாராளமாக விற்கப்படும் போதை பொருட்கள் குறித்து புகார்கள் சென்று போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
வாய்க்கால் கட்டமைப்பு இல்லாத சூழலால் மழை நீர், கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது.பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் தனியார் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடியும் தொடர்கிறது. இதோடு குடிமகன்கள் தொல்லையாலும் மக்களும் பாதிக்கின்றனர்.
போதை பொருட்களால் அச்சுறுத்தல்
தாஸ், மெக்கானிக் : டிவி டவர் பகுதியிலலிருந்து பெருக்கெடுக்கும் மழை நீர் நாய்ஸ் ரோடு வழியாக தெருவின் தாழ்வான பகுதியில் ஒன்று சேர்ந்து தேங்குவதால் சுகாதாரக்கேடுடன் , குடியிருப்பு வாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது. குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மிலிருந்து அடிக்கடி தீப்பொறிகள் எழுவதால் விபத்து அபாயத்துடன் வசிக்கிறோம்.
இரவில் நடமாடும் காட்டு மாடுகளால் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை கட்டுப்பாடுடன் பயன்படுத்தாமல் இஷ்டம்போல் திறந்துவிடும் நிலையால் குடிநீர் வீணாகிறது.
நகராட்சி மூலம் இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பட்சத்தில் குற்ற செயல்கள் தவிர்க்கப்படும். மேலும் போதை வஸ்து பொருட்கள் தாராளமாக விற்பனை செய்வதால் அச்சுறுத்தல் உள்ளது. போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமகன்கள் தொந்தரவு
ஜூனியஸ், டிரைவர்: கொடைக்கானல் சுற்றுலா தலத்தில் முக்கிய பங்கு வகிப்பது பஸ் ஸ்டாண்ட் இதில் பஸ்களை தவிர்த்து தனியார் வாகனங்கள், டிராவல்ஸ், நகராட்சி காலாவதியான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் இடையூறு ஏற்படுகிறது.
உட்வில் ரோடு ஒருவழிப்பாதையாக உள்ள நிலையில் ரோட்டோரம் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கிறது. தந்திமேடு நாய்ஸ் ரோடு இடையே உள்ள ரோடு பாதி அமைத்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
எஞ்சிய ரோடு அமைக்கும் பட்சத்தில் தந்திமேடு பகுதி மக்கள் பயன்பெறுவர். வார்டில் பராமரிப்பற்ற கழிப்பறைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சாக்கடைகளின் மேல் அமைக்கப்பட்டுள்ள மேல் தளங்கள் சேதமடைந்து விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.
ரோடுகளை சீரமையுங்க
மேரி, கூலித்தொழிலாளி: அந்தோணியார் சர்ச் தெரு பகுதியில் சாக்கடைகள் கட்டமைக்கப்படாமல் வெறுமனே கழிவுநீர் ரோட்டில் செல்லும் நிலை உள்ளது. தெருவிளக்குகள் சரிவர எரியாத நிலையில் உள்ளது .இதை சீர் செய்ய வேண்டும். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வீட்டு வரி, குடிநீர் வரி வழங்க வேண்டும். வார்டில் சேதம் அடைந்த ரோடுகளையும் சீரமைக்க வேண்டும்.
காட்டு மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
இருதயராஜா, கவுன்சிலர், (அ.தி.மு.க.,): வார்டில் இதுவரை ரூ. 7 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த ரோடுகள் விரைவில் சீரமைக்கப்படும். பட்டா இல்லாதவர்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும்.
டிரான்ஸ்பார்மில் ஏற்படும் தீப்பொறியை சீர் செய்ய மின்வாரியத்திடம் கூறப்பட்டு விரைவில் சீர் செய்யப்படும். சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்படும். போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவரை போலீசார் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறைகள் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். வார்டில் சமுதாயக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காட்டு மாடுகளை கட்டுப்படுத்த தனியார் ஆக்கிரமிப்பு இடத்தை கையகப்படுத்தி அதன் மூலம் வனவிலங்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்,என்றார்.