வடமதுரை,-வடமதுரை அருகே இரு ஒன்றியங்களை இணைக்கும் ரோடு பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் இருப்பதால் சுற்று கிராம மக்கள் பரிதவிக்கின்றனர்.
வடமதுரை ஒன்றியம் சிங்காரக்கோட்டை ஊராட்சி சின்னரெட்டியபட்டியில் இருந்து சங்கிலிதேவனுார் வழியே சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டி ஊராட்சி அக்கரைப்பட்டிக்கு 2.5 கி.மீ., துார ரோடு உள்ளது. இரு ஒன்றியங்களின் கடைசி பகுதியில் இருப்பதால் இந்த ரோட்டை புதுப்பிப்பதில் அதிகாரிகளிடம் அக்கறை இல்லாமல் உள்ளது.
பெரியரெட்டியபட்டி, சின்னரெட்டிபட்டி, சிங்காரக்கோட்டை, அகிலாண்டபுரம், குரும்பபட்டி பகுதியினர் வங்கி சேவை, வேலைக்கு செல்லவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் கம்பிளியம்பட்டி செல்வதற்கு இந்த ரோட்டையை பயன்படுத்த வேண்டியுள்ளது. ரோட்டின் இரு பக்கமும் முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
சில இடங்களில் பாலமும் சேதமடைந்துள்ளதால் இரு ஒன்றியங்களை சேர்ந்த பல கிராம மக்கள் பரிதவிக்கின்றனர். இரு ஒன்றிய நிர்வாகங்களும் இணைந்து இந்த ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவ ரத்திற் கு நோ யூஸ்
பி.பெருமாள், விவசாயி, சங்கிலிதேவனுார்: இப்பகுதியில் விவசாயமே பிரதானம் என்பதால் அதிக வேலை வாய்ப்பு கிடையாது. இதனால் பலரும் தொலைவில் இருக்கும் மில்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் வேலைக்கு செல்ல டூவீலர் ,வேன்களில் பயணிக்கின்றனர். இந்த ரோடு குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்றதாக இருப்பதால் அதிக சிரமம் உள்ளது. ரோட்டை விரைவில் சீரமைத்து மினி பஸ் சேவையை துவக்க வேண்டும்.
-8 ஆண்டாகியும் சீரமைப்பு இல்லை
கே.ரமேஷ், விவசாயி, சின்னரெட்டியபட்டி: எங்கள் பகுதியில் ஒன்றிய நிர்வாக ரீதியாக வடமதுரை ஒன்றியத்தில் இருந்தாலும் கல்வி, சந்தை, வியாபார பொருட்களை விற்க, வாங்க கம்பிளியம்பட்டி அதிகாரிபட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது.
சின்னரெட்டியபட்டியில் இருந்து அக்கரைப்பட்டி வரையிலான ரோடு அமைக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும் புதுப்பிக்கப்படாமல் கிடப்பில் வைத்துள்ளனர். இதனால் மாணவர்கள், விவசாயிகள் அதிக சிரமப்படுகின்றனர்.
இரு பக்கமும் முட்புதர்கள்
வி.சங்கிலி, மெக்கானிக், சிங்காரகோட்டை: சின்னரெட்டிபட்டி, சிங்காரக்கோட்டை, அகிலாண்டபுரம், குரும்பபட்டி பகுதியினர் வங்கி சேவை, வேலைக்கு செல்லவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கம்பிளியம்பட்டிக்கு செல்ல இந்த ரோட்டையை பயன்படுத்த வேண்டியுள்ளது.
ரோட்டின் இரு பக்கமும் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். சேதமடைந்து கிடக்கும் பாலங்களையும் புதுப்பிக்க வேண்டும்.
மூன்று சக்கர வாகனங்கள் கூட இங்கு தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. முன்னுரிமை தந்து இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.
புதுப்பிக்க முயற்சிப்பேன்
ஆர்.மோகன், ஒன்றிய கவுன்சிலர், சிங்காரக்கோட்டை:இரு ஒன்றியங்களின் எல்லை பகுதியில் இருப்பதால் அதிகாரிகள் அக்கறை காட்டாமல் அலட்சியமாக உள்ளனர். இப்பகுதி மக்கள் சேதமடைந்து கிடக்கும் இந்த ரோட்டினால் படும் அவதி குறித்து பல முறை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் பேசி உள்ளேன்.
மீண்டும் தொடர்ந்து வலியுறுத்தி சின்னரெட்டியபட்டி அக்கரைப்பட்டி ரோடு புதுப்பித்தல் பணி நடக்க முயற்சிப்பேன், என்றார்.