ஐ.ஆர்.சி., விதிகளை அப்பட்டமாக மீறி, பாலம் சந்திப்புப் பகுதியில் விளம்பரங்கள் நிறுவுவதற்கு, மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில், முறையான அனுமதியின்றியும், விதிகளை மீறியும் அரசு மற்றும் தனியார் இடங்களில், ஏராளமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, பயணிகள் நிழற்குடை, டிஜிட்டல் போர்டுகள், பிளக்ஸ் பேனர்கள் என இஷ்டம்போல, அனுமதியற்ற விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் பெயரளவுக்கே, நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில்தான், கடந்த ஜூன் 1ம் தேதியன்று, கருமத்தம்பட்டி பகுதியில், அனுமதியின்றி விளம்பரப் பலகை நிறுவும்போது, சரிந்து விழுந்து, அப்பாவித் தொழிலாளர்கள் மூன்று பேர் பலியாயினர்.
அதன்பின்பே, மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொண்டு, அனைத்து விளம்பரப் பலகைகளையும் அகற்ற அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தது. மாவட்டம் முழுவதும் எக்கச்சக்கமான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளின் இன்னும் நிறைய விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகவுள்ள ஒப்பணக்கார வீதியில், விழிப்புணர்வுக்கான ஒலி பெருக்கி வைப்பதாகக் கூறி, போலீசார் சார்பிலேயே கம்பங்கள் நடப்பட்டு, அவற்றில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, அவினாசி ரோடு மேம்பாலத்தின் 'ரவுண்டானா' பகுதியில், விளம்பரம் செய்ய அணுகுமாறு, தொடர்பு எண்கள் தரப்பட்டுள்ளன. இந்திய சாலைக்குழும (ஐ.ஆர்.சி.,) விதிகளின்படி, சாலை சந்திப்புப் பகுதியிலிருந்து, 100 மீட்டர் துாரத்துக்கு விளம்பரப் பலகைகள் வைக்கக்கூடாது என்ற விதிமுறையை மீறி, இங்கு விளம்பரங்கள் வைப்பதற்கு, மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் இடங்களில் அனுமதியின்றி, விதிகளை மீறி விளம்பரம் வைப்பதை, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் அதிரடியாக அகற்றி வருகின்றன.ஆனால் இங்கு விதிகளை மீறி விளம்பரம் வைக்க, மாநகராட்சி நிர்வாகமே அழைப்பு விடுத்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான பாலத்தில், விளம்பரம் வைக்க அந்த துறை சார்பில் எந்த அனுமதியும் தரப்படவில்லை; அப்படியிருக்கையில், மாநகராட்சி இங்கு விளம்பரம் வைக்க அனுமதித்து வருமானம் பார்ப்பது, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதை அகற்ற வேண்டிய என்.எச்., அதிகாரிகள், கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இதனால், விதிகளை மட்டுமின்றி, துறையின் எல்லை மீறியும் விளம்பரம் வைக்க, மாநகராட்சி நிர்வாகம் முயற்சி செய்வது தெரிகிறது. விளம்பரங்கள் நிறுவப்படும் முன்பே, இதைத் தடுக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும்.
-நமது நிருபர்