சென்னை: சென்னைக்கு அருகில் புலிப்பாக்கம் கல் குவாரி நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்தும் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வேளையில், சென்னைக்கும் கைகொடுக்கும் வாய்ப்பை இத்திட்டம் ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் ஊராட்சியில், 250 ஏக்கர் பரப்பளவில், 25 ஆண்டுகளாக கல் குவாரி இயங்கியது. 300 அடிக்கு மேல் ஆழம் உடைய இந்த கல் குவாரி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு, சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, செங்கல்பட்டு அடுத்த கல் குவாரி குட்டைகளில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக்க, அரசு முடிவு செய்தது.
தொடர்ந்து, மாநகராட்சி, தமிழக குடிநீர் வாரியம், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அதிகாரிகள், புலிப்பாக்கம் கல் குவாரி குட்டை நீரை எடுத்து பரிசோதனை செய்தனர். 'குவாரியின் தண்ணீரை குடிநீராக பயன்படுத்த முடியும்' என, தெரியவந்தது.
சோதனை முடிவுகள், அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும், காரணம் சொல்லப்படாமல் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சென்னைக்கு அருகில் புறநகரான மறைமலை நகர், சுற்று வட்டார பகுதிகளுக்கு, புலிப்பாக்கம் குவாரி நீரை சுத்திகரித்து, குடிநீராக வினியோகிக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால், குவாரி நீரை குடிநீராக்கும் பணியை மேற்கொள்ள, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
இதையடுத்து, கல் குவாரியை சுற்றிலும் சுவர் எழுப்பி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, குழாய் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இப்பணிகளுக்காக 40 கோடி ரூபாய் நிதி கேட்டு, திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
புலிப்பாக்கம் கல் குவாரி நீரை சுத்திகரித்து குடிநீராக வினியோகிக்கும் பணியை, மறைமலை நகர் நகராட்சி மேற்கொண்டுள்ளது. அரசு அனுமதி பெற்று, விரைவில் பணிகள் நடக்கவுள்ளன.
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில், அங்கிருந்து குழாய் வழியே குடிநீர் எடுத்து வர திட்டமிடப்படும். அதற்கான வழிமுறைகளை, வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே துவங்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புலிப்பாக்கம் கல் குவாரி குட்டைகளில், மழைக்காலத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பி இருக்கும். கோடை காலத்தில் தண்ணீர் குறைந்தாலும், ஊற்று நீர் கிடைக்கும்.கல் குவாரி குட்டைகளின் தண்ணீரை முறையாக கையாண்டால், சென்னை மாநகர் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க முடியும்.
- சமூக ஆர்வலர்கள்