ஈரோடு: பள்ளி குழந்தைகளுக்கு இந்தாண்டு சாலை விபத்தில்லாத ஆண்டாக, பள்ளி வாகன இயக்கத்தை மேம்படுத்த பெற்றோர், அரசு அலுவலர், போலீசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பள்ளிகள் விரைவில் திறக்கவுள்ள நிலையில், தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள் அஜாக்கிரதையாக, கவனக்குறைவாக, அதிவேகமாக ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதை மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சாலைக்கு வந்து கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்பதே பெற்றோர் விருப்பம்.
ஈரோடு மாவட்டத்தில், 196 தனியார் பள்ளிகளில், 1,384 பஸ், வேன்கள் உள்ளன. இவற்றில் மே 13ல் துவங்கி ஒவ்வொரு பகுதியாக அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நிர்ணயித்த வேகத்தில் பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும். உதவியாளர்கள் அவசியம். வாகனத்தின் பின்புறம் மாணவர் இல்லாததை உறுதி செய்த பின், ஓட்டுனர்கள் இயக்கி, பள்ளி குழந்தைகளுக்கு இந்தாண்டு விபத்தில்லாத ஆண்டாக மாற்றுவதை குறிக்கோளாக கொள்ள, பெற்றோர், அரசு அலுவலர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பதுவை நாதன், வெங்கட்ரமணி, சக்திவேல் கூறியதாவது: பள்ளி வாகனத்தின் முன்புறம், பின்புறம் கேமரா அமைக்க வேண்டும். கேமரா பதிவுகளை டிரைவர் வாகனத்தை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களில் முன்புற, பின்புற கேமராக்களை பள்ளிகள் கட்டாயம் பொருத்தி இருக்க வேண்டும். இதற்கு மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தகுதி சான்று பெற வரும்போது கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது உறுதி செய்த பிறகே வழங்கப்படும். இது மட்டுமல்ல, அரசு விதித்த அனைத்து நிபந்தனைகளையும் கடைபிடிக்கப்படுவது அவசியம். பள்ளி வாகனங்களில் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதை பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி பொருளாளர் சிவக்குமார் கூறியதாவது: பள்ளி வாகனத்தில் வருகை பதிவேடு பராமரிக்கப்படுகிறது. பஸ்சில் ஏறும், இறங்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கையை உதவியாளர் உறுதி செய்கிறார். ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு பள்ளி அலுவலர் பொறுப்பு அலுவலராக உள்ளனர். கால தாமதத்தை தவிர்க்க, 10 நிமிடங்கள் முன்னதாக கிளம்ப அறிவுறுத்தியுள்ளோம். வாகனத்தை சீராக இயக்க வேண்டும். திடீர் பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். மாலையில் பெற்றோர் இருப்பதை உறுதி செய்த பிறகே, மாணவ, மாணவிகளை இறக்கி விட ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
பள்ளி நிர்வாகமும் மாதந்தோறும் டிரைவர்களுக்கு ஆலோசனை கூட்டம் போடுகிறது. இது தவிர வட்டார போக்குவரத்து அலுவலர்கள், லோக்கல் போலீசாரும் கூட்டம் போடுகின்றனர். மாணவ, மாணவிகளை விபத்தில் இருந்து தவிர்க்கும் வகையில், பள்ளி வாகனங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனை ஏற்க கூடியவை தான். இவ்வாறு அவர் கூறினார்.