கோபி: கோபி ஜே.எம்.1 நீதிமன்றத்தில், வழக்குகள் சார்ந்த, பணம் மற்றும் நகைகள், அதற்கென உள்ள பெட்டியில் வைக்கப்படும். கடந்த, 6ம் தேதி நடந்த விசாரணைக்காக, கருவூலத்தில் இருந்து நீதிமன்றத்துக்கு பெட்டி எடுத்து செல்லப்பட்டது. அப்போது நான்கு வழக்குகளின் சார்ந்த சொத்தாக, 63 ஆயிரத்து, 255 ரூபாய் மதிப்புள்ள, நகை மற்றும் பணம் களவு போனது தெரிந்தது. நீதிபதி விஜய் அழகிரி புகாரின்படி, கோபி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் கருவூலத்தில் இருந்த மேலும் மூன்று பெட்டிகளில், நகை மற்றும் பணம் களவு போனது தெரியவந்தது. இதனால் கோபி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தலைமையில், ஆறு தனிப்படை அமைத்து, புலன் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்காக நீதிமன்றம் முதல் கருவூலப்பணியாளர் வரையிலானோரின் விரல் ரேகையை, போலீசார் சேகரித்துள்ளனர். தனிப்படை போலீசாரின் முழு கவனமும், கருவூலத்தின் பக்கம் திரும்பியுள்ளது. கோபி சார் நிலை கருவூலத்தில் பாதுகாப்பு பெட்டக அறைகளில், மாவட்ட கருவூல அதிகாரிகள் தரப்பில் நேற்று சோதனை நடந்தது. இதில் அங்கிருந்த 'சிசிடிவி' கேமரா பழுதாகி பல ஆண்டுகளானது தெரிந்தது.