டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தில் கார் கண்ணாடியை உடைத்து, ௭.௩௦ லட்சம் ரூபாய் திருடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
டி.என்.பாளையத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ்குமார், ௫௨; தற்போது பவானிசாகர் அருகே பசுவபாளையத்தில் வசிக்கிறார். டி.என்.பாளையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டியுள்ளார். நேற்று திறப்பு விழா நடக்கவிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெரியப்பா மகனிடம், ௭.௩௦ லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். துணிப்பையில் பணத்தை வைத்துக்கொண்டு, டி.என்.பாளையம் அருகே ஓட்டுக்கடை மேட்டில் உள்ள தோட்டத்துக்கு காரில் சென்றார்.
சிறிது நேரம் கழித்து காருக்கு வந்தபோது, இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருக்க, துணிப்பையில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், பங்களாப்புதுார் போலீசில் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டுள்ளனர். பணம் கொள்ளை போனதால், டி.என்.பாளையத்தில் ரமேஷ்குமார் கட்டியிருந்த காம்ப்ளக்ஸ் திறப்பு விழா நேற்று நடக்கவில்லை.