மாரியம்மன் கோவிலில்
கும்பாபிஷேக விழா
ஈரோடு, வில்லரசம்பட்டியில் உள்ள, பிரசித்தி பெற்ற விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக கடந்த, 6ம் தேதி காலை தொடங்கியது. நேற்று முன்தினம் கோபுர கலச பூஜைகள், கோபுர கலசங்கள் ஊர்வலம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக சிலைகளுக்கு காப்பு கட்டுதல், நான்காம் கால பூஜையை தொடர்ந்து, 9:௦௦ மணிக்கு விநாயகர் மற்றும் மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
ரேஷன் கார்டு, ஆதார்
சமர்ப்பிக்க யோசனை
சேலம் மண்டல வீட்டு வசதி துணை பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் செயல்படும், அனைத்து முதன்மை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள், தங்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை விபரங்களை தொடர்புடைய, வீட்டு வசதி சங்கத்தில் வரும், 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தகவலை சேலம் மண்டல துணை பதிவாளர் (வீட்டு வசதி) ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு, சென்னிமலையில்
உண்டியல் எண்ணும் பணி
ஈரோட்டில் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், மூன்று மாதத்துக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இதன்படி நேற்று காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இதில் பொது உண்டியல் காணிக்கை ஆறு லட்சத்து, 98 ஆயிரம் ரூபாய்; கோசாலை உண்டியலில், ௧,233 ரூபாய் கிடைத்தது. மேலும், 44 கிராம் தங்கம், 380 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
இதேபோல் சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் ரொக்ககமாக, 25 லட்சத்து, 64 ஆயிரம் ரூபாய், 72 கிராம் தங்கம், 2,810 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக கிடைத்தன.
ரேஷன் அரிசி கடத்தல்
தடுப்பு குறித்து ஆலோசனை
மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது, குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் ஈரோடு சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து, நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் எஸ்.பி., ஜவகர், குடிமை பொருள் குற்றப்புலனாய்வு எஸ்.பி., பாலாஜி பங்கேற்றனர். ஓரிரு நாட்களில் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். இதேபோல் நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து அரவைக்கு நெல்லை டெண்டர் முறையில் பெறும் அரிசி ஆலைகளிலும், விரைவில் ஆய்வு நடக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
புது தொழில் நுட்ப மையம்
அரசு ஐ.டி.ஐ.,யில் திறப்பு
ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில் புதிய தொழில் நுட்ப மையம் திறக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில், 22 அரசு ஐ.டி.ஐ.,களில், 762 கோடி ரூபாய் செலவில், 4.0 தொழில் நுட்ப மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை ஒரகடத்தில் உள்ள ஐ.டி.ஐ.,யை நேரிலும், பிற ஐ.டி.ஐ.,க்களை, காணொலி காட்சி மூலமும் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
ஈரோடு ஐ.டி.ஐ., 1965 ல் துவங்கப்பட்டு, 30,000 மாணவர் இதுவரை படித்துள்ளனர். தற்போது, 372 பேர் படித்து வருகின்றனர். மற்றொரு புதிய திட்டத்தில், 120 பேர் தொழில் துறையான ரோபாட்டிக்ஸ், டிஜிட்டல் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு, மெய்நிகர் சரிபார்ப்புகளின் அடிப்படைகள், உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன், மேம்பட்ட சி.என்.சி., இயந்திர நுட்ப படிப்புகளை படிக்க இயலும்.
மரக்கன்றுகள் நடவு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, நெடுஞ்சாலைதுறை சார்பில், சென்னிமலை அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் வேம்பு, புங்கை, வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செங்கோட்டையன், சென்னிமலை யூனியன் சேர்மன் காயத்ரி இளங்கோ, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விதி மீறிய டூவீலர் பயணம்
கார் மோதி வாலிபர் பலி
தாராபுரம் அருகே விதிமீறி, ஒரே டூவீலரில் மூவர் பயணித்ததுடன், ஒன்-வே சாலையில் சென்றதால், கார் மோதியதில் வாலிபர் பலியானார்.
தாராபுரத்தை அடுத்த நல்லிகவுண்டன் தோட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 23; நேற்று மாலை, 5:00 மணியளவில், ஹீரோ டீலக்ஸ் பைக்கில், நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பூபதி, 30; பழநியை சேர்ந்த ஹரிஹரன், 26, ஆகியோருடன், பைபாஸ் சாலையில் ஒன்வேயில் விதிமீறி சென்றார். ஆச்சியூர் பிரிவு அருகே சென்றபோது, எதிரே ஹாரூன் ஓட்டி வந்த ஹோண்டா சிட்டி கார், பைக் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட மூவரும் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஹரிஹரன் இறந்தார். மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக, கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காரை
இதுகுறித்து தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
நுால் மில்லில் தீ விபத்து
ரூ.5 லட்சத்துக்கு சேதம்
வெள்ளகோவில் அருகே நுால் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டது.
வெள்ளகோவிலை சேர்ந்தவர் அருண்குமார். அதே பகுதியில் ரெட்டிவலசு ரோடு பகுதியில், நுால் மில் (கழிவு பஞ்சில் இருந்து நுால் தயாரிக்கும் ஆலை) நடத்தி வருகிறார். மில்லில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் மாலை, மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி தலைமயிலான வீரர்கள் சென்றனர். இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் நுால், இயந்திரம், கட்டடம் என ஐந்து லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது. மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
அமராவதி ஆற்றின் குறுக்கே
தடுப்பணை பணி துவக்கம்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், கம்பிளிம்பட்டியில், நீர்வளத்துறை சார்பில், 13.29 கோடி ரூபாய் மதிப்பில், அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. ஈரோடு
எம்.பி., கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். அமைச்சர் சாமிநாதன் அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தார்.
தாராபுரத்தில் பூங்கா திறப்பு
தாராபுரம், ஜூன் 9-
தாராபுரத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா திறக்கப்பட்டது.
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், தாராபுரம் நகராட்சி, 23வது வார்டில், 46 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துதாஸ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சாய்ந்த நிலையில் கம்பம்
சரி செய்ய வலியுறுத்தல்
காங்கேயம் அருகே, சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியம், ஆலாம்பாடி ஊராட்சிக்குப்பட்ட சென்னிமலைகவுண்டன் வலசு பகுதியில் செல்லும் சாலை ஓரத்தில் மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சாய்ந்து கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும் குடியிருப்புகள் அருகே உள்ளதால், பலமான காற்று வீசும் போது மின் கம்பம் சாய்ந்து வீட்டின் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று, மின் கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.
கால்நடை சந்தைக்கு
அதிகரித்த வரத்து
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், விவசாயிகள் கால்நடைகளை கொண்டு வந்தனர். இதில், 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று; 25,000 ரூபாய் முதல், 50,000 ரூபாய் மதிப்பில், 300 எருமை; 25,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள் விற்பனைக்கு வந்தன. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில விவசாயிகள், வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வந்தனர். மொத்தம், 80 சதவீத மாடுகள் விற்பனையாகின. கலப்பின மாடுகள், 60,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் வரை விற்றன.
பால் நிறுவனத்தை முற்றுகையிட
முயற்சி; அதிகாரிகள் சமாதானம்
கழிவு வெளியேற்ற புகாரை தொடர்ந்து, தனியார் பால் நிறுவனத்தை மக்கள் முற்றுகையிட சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
மொடக்குறிச்சி தாலுகா அவல்பூந்துறை பேரூராட்சி, ராசாம்பாளையம், மந்திரிபாளையம் பகுதியில் தனியார் பால் பண்ணையுடன் கூடிய தொழிற்சாலை செயல்படுகிறது. ஆலையில் கழிவு சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால், நிலத்தடி நீர், அனுமன்நதி பாதிக்கிறது என அப்பகுதியினர், கலெக்டர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகத்தில் மனு வழங்கினர்.
துர்நாற்றம் வீசுவதாகவும், சுவாசம் தொடர்பான பிரச்னை எழுவதாக கூறி, ஆலையை நேற்று முற்றுகையிட மக்கள் சென்றனர். அதற்குள் தகவலறிந்து மொடக்குறிச்சி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சென்றனர். மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட நிர்வாகம் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக தெரிவிக்கவே, மக்கள் கலைந்து சென்றனர்.
இயக்கத்தை நிறுத்தாத லாரி
டிரைவரின் உயிரை பறித்தது
காங்கேயம் அருகே, இயங்கி கொண்டிருந்த லாரி, தானாக நகர்ந்து ஓட்டுனரின் உயிரை பறித்தது, சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரையை சேர்ந்தவர் கண்ணன், 38; திருமணமான இவர், சேலம் மாவட்டம் சங்ககிரியில் தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்தார். காங்கேயம் அருகே மூலக்கடை பகுதியில், ஒரு அரிசி ஆலைக்கு நெல் லோடு இறக்க, நேற்று முன்தினம் வந்தார். லோடு இறக்கிய பின் கிளம்ப, மாலை, 6:30 மணியளவில் லாரியை ஸ்டார்ட் செய்தார்.
அப்போது லாரியின் முன் பக்கத்தில் தார்பாய் தொங்கி கொண்டிருந்தது. இதை சரி செய்வதற்காக, லாரியின் இயக்கத்தை நிறுத்தாமல் சென்றார். முன்பக்கம் நின்று தார்ப்பாயை சரி செய்தபோது, எதிர்பாராதவிதமாக லாரி தானாக நகர்ந்து முன்னோக்கி சென்றது.
அப்போது எதிரே இருந்த சுவரில் மோதி நின்றது. இதில் லாரிக்கும், சுவருக்கும் இடையே சிக்கிய கண்ணன் பலியானார். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.