பவானி: மொபைல்போனில் பேசியபடி பஸ்ஸை இயக்கிய டிரைவருக்கு, வாலிபர் ஒருவர் பாடம் நடத்தியது, பவானியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோட்டில் இருந்து பவானி-வழியாக மேட்டூருக்கு, ஒரு தனியார் பஸ், 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று மதியம், ௨:௩௦ மணிக்கு சென்றது. பவானி பழைய பாலத்தில் சென்றபோது, டிரைவர் மொபைல்போனில் பேசியபடி இயக்கியுள்ளார்.
அப்போது டூ வீலரில் சென்ற ஒரு வாலிபர், பஸ் ஓட்டியபடி மொபைல் பேசாதீர்கள் என கூறியும், டிரைவரின் மொபைல் பேச்சு தொடர்ந்துள்ளது.
இதனால் பவானி மெயின் ரோட்டில், போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே சென்றபோது, டூவீலரை குறுக்கே போட்டு வாலிபர் பஸ்சை வழிமறித்து நிறுத்தினார். மேலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, புகார் கூறினார். இதனால் டிரைவர், கண்டக்டரை, ஸ்டேஷக்கு அழைத்து போலீசார் விசாரித்தனர்.
அதேசமயம் நடுரோட்டில் பஸ் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பஸ்ஸில் இருந்து இறங்கி வந்த பயணிகள் சத்தமிடவே பரபரப்பு ஏற்பட்டது. 'இதென்னடா வம்பா போச்சு?' என நினைத்த போலீசார், இனி மொபைல்போனில் பேசியபடி இயக்கினால், உரிமம் ரத்து செய்ய நேரிடும் என டிரைவரை எச்சரித்து
அனுப்பினர்.
மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்ட வேண்டாம் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அவ்வாறு செய்த ஒரு பஸ் டிரைவரை, சாலையிலேயே வழிமறித்து பாடம் நடத்திய வாலிபரின் துணிச்சல், அங்கிருந்த பலரின் பாராட்டை பெற்றது.