வெள்ளகோவில்: முத்துார் அருகே, சிறையில் இருந்து ஜாமினில் வந்த தொழிலாளி, வாய்க்கால் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் முத்துார், வரட்டுக்கரை அருகில், எல்.பி.பி., வாய்க்கால் பகுதியில், ஆண் சடலம் கிடப்பதாக, வெள்ளகோவில் போலீசாருக்கு நேற்று தகவல் போனது.
போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், முத்துார், வள்ளியரச்சல், சின்னகவுண்டன்வலசை சேர்ந்த மோகன சுந்தரம், 43, கூலி தொழிலாளி என தெரிவந்தது. குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் இரு குழந்தைகளுடன் மனைவி, அவரது பெற்றோர் வீட்டுக்கு மூன்று மாதத்துக்கு முன் சென்று விட்டனர்.
தாய் ராஜம்மாளுடன் மோகனசுந்தரம் வசித்தார். கடந்த ஏப்., மாதம் அண்டை வீட்டாருடன் மோகனசுந்தரம் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்த வழக்கில் கைதான அவர், நிபந்தனை ஜாமினில் கடந்த மாதம், 7ம் தேதி வெளியில் வந்தார். அன்று முதல் காலை, மாலையில் வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்ததும்
தெரிய வந்தது.
இந்நிலையில் மோகனசுந்தரம் தகராறில் ஈடுபட்ட சம்பூர்ணம், 53; அவரின் அண்ணண் நடராஜ் மகன் பிரவீன், 27; மற்றும் மூன்று பேர் நேற்று முன்தினம் மாலை, மோகனசுந்தரத்தை காரில் அழைத்து சென்றது தெரிய வந்துள்ளது. மூவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.