கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை, 8 இடங்களில் பொது வினியோகத்திட்டம் தொடர்பான பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று, குறிப்பிட்ட கிராமங்களில் பொது வினியோக திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை (10ம் தேதி) காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைத்து வட்டங்களிலும் நடக்கிறது. பொதுமக்கள் தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.