இறந்த எஸ்.எஸ்.ஐ.,யின்
குடும்பத்துக்கு நிதியுதவி
தர்மபுரி அடுத்த ஏ.ஜெட்டிஹள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் எஸ்.எஸ்.ஐ., செந்தில்குமார். இவர் புற்றுநோயால் கடந்த, 2023 மார்ச், 14ல் இறந்தார். இவருடன் கடந்த, 1993ல் பணியில் சேர்ந்த, தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் போலீசார், 'போலீசார் காக்கும் கரங்கள் குழு' சார்பாக, 7,56,000 ரூபாய் மற்றும் அவருடன், தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்த போலீசார், 1,44,000 ரூபாய் என மொத்தம், 9 லட்ச ரூபாய் திரட்டினர். அத்தொகையை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், செந்தில்குமாரின் மனைவி மஞ்சு, மகன்கள் சந்திரகுமார், சரண்குமாரிடம் நேற்று வழங்கினார். அப்போது, செந்தில்குமாருடன் பணியாற்றிய போலீசார் உடனிருந்தனர்.
அனுமதியின்றி பேனர்
இரண்டு பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லுாரி அருகில் சிலர், அனுமதியின்றி பிறந்த நாள் கொண்டாட பதாகைகளை கட்டி வைத்திருப்பதாக, டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, கூடியிருந்தவர்களை கலைந்து போக கூறினர். மேலும் அங்கு அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக, கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி அப்பு, 29, பெத்தனப்பள்ளி முனியப்பன், 34 உட்பட சிலர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ஸ்கூட்டரில் வைத்திருந்த
ரூ.8.25 லட்சம் 'அபேஸ்'
ஓசூர் அடுத்த பாகலுரை சேர்ந்தவர் நடராஜ், 59; சர்ஜாபுரம் சாலையில் மெடிக்கல்ஸ் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம், தன் குழந்தைகளின் கல்விக்காக, வங்கியில் நகைகளை அடகு வைத்து, 8.25 லட்சம் ரூபாய் பெற்றார். அதை ஸ்கூட்டர் சீட்டின் அடியில் வைத்து, மெடிக்கல்ஸ் சென்றுள்ளார். இரண்டு பைக்குகளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் நடராஜை மறித்து, மருந்து விபரம் கேட்டுள்ளனர். நடராஜ் ஸ்கூட்டரை நிறுத்தி விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பைக்கில் வந்த ஒருவர், நடராஜ் ஸ்கூட்டரிலிருந்த பணத்தை எடுத்து சென்றுள்ளார். இதையறியாமல் மெடிக்கல்ஸ் வந்த நடராஜ், ஸ்கூட்டரின் சீட்டை திறந்து பார்த்தபோது, பணம் மாயமானது தெரிந்தது. பாகலுார் போலீசார், அங்குள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆராய்ந்து, ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
குறையாத வெயிலால்
தொடரும் நுங்கு விற்பனை
தர்மபுரி நகர்பகுதிக்கு, மேச்சேரி, ஓமலுார் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பணை விவசாயிகள் நுங்கை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். மார்ச் மற்றும் மே மாதங்களில், தர்மபுரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் இதை விரும்பி வாங்கிச் செல்வர். இந்நிலையில், தற்போது ஜூன் மாதம் துவங்கியுள்ள நிலையில், வெப்பம் தணியாமல், 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், தர்மபுரிக்கு நுங்கு வரத்து அதிகரித்த நிலையில், பொதுமக்கள் அதை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
பச்சைப்பட்டாணி
விலை உயர்வு
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து உழவர்சந்தைகளில், பச்சைப்பட்டாணியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ பச்சை பட்டாணி, 150 ரூபாய்க்கு விற்றது. தொடர்ந்து விலை உயர்வால் நேற்று முன்தினம், 160 எனவும், நேற்று, 180 ரூபாய்க்கும் விற்பனையானது. இதன் விலை, மேலும் உயர வாய்ப்புள்ளதாக, தர்மபுரி உழவர்சந்தை வியாபாரிகள் கூறினர்.
முதன்மை பதப்படுத்தும்
நிலையத்தில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் புளி, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை பதப்படுத்தி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பி வந்தனர். இதை, மாவட்ட கலெக்டர் சரயு, நேற்று ஆய்வு செய்தார். அப்போது முளாம்பழம், மாங்கூழ் தயாரிப்பு மற்றும் பராமரிப்பது குறித்து, நிலைய மேலாளர் சரவணனிடம் கேட்டறிந்தார்.
பைனான்சியர் வீட்டில்
40 பவுன் நகை திருட்டு
சூளகிரி அருகே பைனான்சியர் வீட்டில், 40 பவுன் நகை திருடு போனது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பேரிகை ரிங் ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 39; இவர் மனைவி முத்துலட்சுமி. சிவக்குமார் அப்பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கர்ப்பமாக இருந்த அவர் மனைவி முத்துலட்சுமியை, திருச்சியிலுள்ள அவர் தாய் வீட்டிற்கு, கடந்த மாதம் சிவக்குமார் அனுப்பினார். அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர, சிவகுமார் திருச்சி சென்றார். மனைவியை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததும், உள்ளே பீரோவில் இருந்த, 40 பவுன் நகைகள் திருடு போனதும் தெரிந்தது.
அவர் புகார்படி, பேரிகை போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடங்கள் சேகரிக்கப்பட்டன.
மலைப்பாதையில் வேன்
கவிழ்ந்து 25 பேர் காயம்
ஓசூர் அருகே மலைப்பகுதியில் பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 25 பேர் படுகாயமடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் பஞ்.,க்கு உட்பட்டது தொளுவபெட்டா மலை கிராமம். இப்பகுதியிலிருந்து நாள்தோறும், 50க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் அகலக்கோட்டையிலுள்ள தனியார் நர்சரி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று காலை, இரு பிக்கப் வேன்களில், 50 பேர் வேலைக்கு சென்றுள்ளனர். தொளுவபெட்டா அருகில் மலைப்பாதையில் சென்றபோது ஒரு பிக்கப்வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த நாகராஜ், மல்லம்மா, அழகிரியம்மா, மல்லிகாம்மா, சிவம்மா, ருத்ரம்மா உட்பட, 25 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் தேன்கனிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
7 பவுன் செயின் பறிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, விக்கினம்பட்டியை சேர்ந்தவர் செங்கோடன், 36; இவர் மனைவி தென்றல், 33; இவர், செல்லம்பட்டியில் வைத்துள்ள மெடிக்கல் ஸ்டோருக்கு தினமும் மொபட்டில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, மொபட்டில் வீடு திரும்பினார். அப்போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர், தென்றலின் கழுத்தில் இருந்த ஏழு பவுன் செயினை பறித்து சென்றார். தென்றல் புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
மஹாபாரத சொற்பொழிவு
ஊத்தங்கரை அடுத்த, மண்ணாடிப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரவுபதி அம்மன் கோவிலில், மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. காஞ்சிபுரம் முத்துகணேசன் முனுகப்பட்டு, தேவராஜன் கவி வாசித்தலுடன், மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த ஜூன் 1ல், தொடங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது. 8ம் நாளான நேற்று, பகாசூரன் வதம் நிகழ்ச்சி நடந்தது. மஹாபாரத விழா குழு தலைவர் கண்ணபிரான் தலைமையில் விழா நடந்தது. இதில், புதுார் பஞ்., தலைவர் ஜெயராமன், மூங்கிலேரி பஞ்., தலைவர் உஷா நந்தினி வஜ்ரவேல், புதுார் புங்கனை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி உள்ளிட்ட ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டு, பகாசுரன் வதம் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். தொடர்ந்து, 21ம் தேதி வரை நிகழ்ச்சி நடக்கும் என, ஊர்மக்கள் தெரிவித்தனர்.