கடந்த மே, 24 இரவு, 10:00 மணியளவில் தேவிகா, அவரது அக்கா இருவரும் காதலன் கஜேந்திரனிடம் தனியாக பேச சென்றனர். அப்போது. கஜேந்திரன் உறவினர்கள் தேவிகாவை தாக்கினர். அவர்களிடமிருந்து தேவிகாவின் அக்கா தப்பித்து, தன் உறவினர்களிடம் தகவலை தெரிவித்தார். உறவினர்கள் கஜேந்திரன் வீட்டிற்கு சென்றபோது, தேவிகா இங்கு வரவில்லை, எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர்.
இந்நிலையில் மறுநாள், தனது மகளை காணவில்லை என தேவிகாவின் தாய் கலைவாணி குளித்தலை போலீசில் புகாரளித்தார். இதற்கிடையில், மே 26ல் காலை சவாரி மேடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் தேவிகா சடலமாக மிதந்தார். அவரது சடலத்தை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
தேவிகாவின் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து, தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். அவரது உடலை இரண்டாவது முறையாக வேறு மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே, 27ல், கரூர் கலெக்டர் அலுவலகம் முன், நுாற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தேவிகாவை தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிவு செய்து, காதலன் தந்தை குணசேகரன், 53. காதலன் மாமா முத்தையன், 51. காதலன் கஜேந்திரன், 19 ஆகியோரை கைது செய்தனர். தேவிகாவின் குடும்பத்தினர் சார்பில், மறு பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தனர்.
நேற்று முன்தினம் மறுபரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, 12:00 மணியளவில் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நள்ளிரவு, 2:30 மணிக்கு உறவினர்களிடம் பிரேதத்தை ஒப்படைத்தனர். பிரேதத்தை பெற்றுக்கொண்ட உறவினர்கள் நேற்று காலை, 10:30 மணிக்கு சவாரிமேடு கிராமத்தில் தேவிகாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.