குளித்தலை: குளித்தலை, பாரதிநகரில் உள்ள ரேஷன் கடையில் வழங்கும் அரிசி பிளாஸ்டிக் அரிசி போல் காணப்பட்டது. இதை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து, நகர பா.ஜ., மண்டல தலைவர் கணேசன், 'ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி எந்த வகையை சேர்ந்தது என்பதை, பொது மக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து குளித்தலை டி.எஸ்.ஓ., நீதிராஜன் கூறியதாவது:
மாநில அரசு மூலம் பொது மக்களுக்கு, போதிய வகையில் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், செரிவூட்டப்பட்ட அரிசி, 100 மூட்டைக்கு ஒரு மூட்டை வீதம் கலந்து பொது மக்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வருகிறது. செரிவூட்டப்பட்ட அரிசி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சமையல் செய்து வழங்கப்பட்டு, பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு விழாக்கள் மற்றும் அனைத்து ரேஷன் கடைகளிலும் துண்டு பிரசுரம் வழங்கி வருகிறோம். செரிவூட்டப்பட்ட அரிசியால் எந்த விதத்திலும் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.