கரூர்: கரூர், அரசு கலைக்கல்லுாரியில் நேற்றுடன் முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது.
கரூர் அரசு கலைக் கல்லுாரியில், 2023--24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கல்லுாரியில், 1,280 இடங்களுக்கு 7,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த, 30 ல் தொடங்கியது. அன்று, சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மாணவ, மாணவிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடந்தது.
கடந்த, 2-ல் இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், 5-ல், பி.காம்., பி.காம். சி.ஏ., பி.பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கும், 6ல் வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. நேற்று முன்தினம் இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடந்தது.நேற்று இளம் அறிவியல் விலங்கியல், 80, தாவரவியல் 80, புவியியல் 80, புவிஅமைப்பியல் 40, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் 40 என மொத்தம், 320 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது.
கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவ, மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் பேராசிரியர்களால் சரி பார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடந்தது. நேற்றுடன் முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், இரண்டாம்
கட்டமாக வரும், 14, 16-ல்
நடக்கிறது.