செங்கற்கள் சரிந்து விபத்து
ஒன்றரை வயது குழந்தை இறப்பு
வேட்டமங்கலம் அருகில், செங்கற்கள் சரிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
நேபாள் சுமன்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்பாஸ்மா, 32. இவரது மனைவி துக்கினிபாஸ்மா. இவர்கள், வேட்டமங்கலத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் தயாரிக்கும் சூளையில் கடந்த 5 ஆண்டுளாக பணிபுரிந்து வருகின்றனர். ரஞ்சித்பாஸ்மாவின் குடும்பத்தினர், அந்த பகுதியில் கொட்டகை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த, 6ல், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்கள், இவரது ஒன்றரை வயது குழந்தையான அனுராஜ் பாஸ்மாவின் மீது விழுந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மளிகை கடையில் மது விற்ற
தி.மு.க.,கிளை செயலர் கைது
மோகனுார் அருகே, மளிகை கடையில் கள்ளத்தனமாக மது விற்ற, தி.மு.க., கிளை செயலரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.பி.,ராஜேஸ்கண்ணன் உத்தரவின்படி, கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மோகனுார் அடுத்த ஆண்டாபுரம் பகுதியில், மோகனுார் எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும், தி.மு.க, கிளை செயலர் குமரவேல், 42 தன் கடையில், மதுபாட்டில்களை மறைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், மளிகை கடையில் இருந்து குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பசு மாட்டை திருடிய
இருவருக்கு காப்பு
எருமப்பட்டியில், மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்த பசு மாட்டை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
எருமப்பட்டி, காந்திரோட்டைசேர்ந்தவர் முருகேசன், 48 விவசாயி. இவர் கடந்த, 7ல் வீட்டின் அருகில் இருந்த மாட்டு கொட்டகையில், பசு மாடு கட்டி வைத்துள்ளார். மறுநாள் பார்த்த போது பசுமாடு காணாமல் போனது. இதையடுத்து, கோணங்கப்பட்டி ரோட்டில் தேடி சென்றுள்ளார்.
அப்போது எருமப்பட்டி ஜீவாநத்தம் தெருவை சேர்ந்த சந்திரசேகரன், 23, பழனி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன், 19 ஆகியோர் மாட்டை ஓட்டியபடி சென்றனர். முருகேசன் புகார்படி, எருமப்பட்டி போலீசார் விசாரித்து சந்திரசேகரன், விக்னேஷ்வரன் ஆகியோரை கைது செய்ததுடன், பசு பாட்டை பறிமுதல் செய்தனர்.
தேங்காய் பருப்பு ஏலம்
ப.வேலுார், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடந்த ஏலத்திற்கு, 11 ஆயிரம் கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, ரூ.79.89, குறைந்தபட்சமாக, ரூ.63.79, சராசரியாக, ரூ.73.70-க்கு ஏலம் போனது. மொத்தம் ஏழு லட்சத்து, 92 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
டூவீலரிலிருந்து விழுந்தவர் பலி
குமாரபாளையம், ஜூன் 9-
குமாரபாளையம், கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் கணேசன், 62, கூலித்தொழிலா
ளி. இவர் மே, 19ல் டி.வி.எஸ். மொபட்டில் கோட்டைமேடு அருகே, சர்வீஸ் சாலையில் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் நேற்றுமுன்தினம் இறந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில்
உலக சுற்றுச்சூழல் தின விழா
கரூர், ஜூன் 9-
-கரூர், ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணவு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி நிறுவனர் பழனிசாமி தலைமை வகித்தார். இதில், 10, பிளஸ் 2 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட இயற்கையோடு எவ்வாறு இணைந்து வாழ வேண்டும் என, பள்ளி முதல்வர் காமேஷ்வரராவ் எடுத்துக் கூறினார். தொடர்ந்து, மாணவர்கள் பல விழிப்புணர்வு சுவரொட்டிகளை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கையை காப்போம் என, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் பள்ளி தாளாளர் அசோக் சங்கர், செயலாளர் ஆனந்த் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
நடந்து சென்ற பெண்கள் மீது
புல்லட் மோதி மூவர் காயம்
குளித்தலை, ஜூன் 9-
குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்., திம்
மாச்சிபுரத்தை சேர்ந்தவர் சிவகாமி, 54. இவரது மருமகள் தேவி ஸ்ரீ, 24, ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த உறவினர் பார்வதி, 44 ஆகியோர் வீட்டு பொருட்கள் வாங்க திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றனர்.
அப்போது புகழ் என்பவரது வீட்டின் அருகே, குளித்தலையில் இருந்து கரூர் நோக்கி சென்ற ராயல் புல்லட் ஓட்டி வந்தவர், மூவர் மீதும் மோதினார். இதில் மூன்று பெண்களும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உதவியுடன், குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளனர்.
இது குறித்து சிவகாமியின் மகன் தனபால், 33 கொடுத்த புகார்படி, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்த ராஜா என்பவர் மீது, லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து. விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டப்பணிகள் ஆணைக்குழு
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கரூர், ஜூன் 9-
சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என, அக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்
குழுவில் லீகல் டிபன்ஸ் கவுன்சில் சிஸ்டம் என்ற பிரிவிற்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து அலுவலக உதவியாளர், கிளார்க், வரவேற்பாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், பியூன் ஆகிய பணியிடங்களுக்கு, தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணியிடங்களுக்கான தகுதி, தேர்வுமுறை, விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறித்த இதர தகவல்களுக்கு கரூர் மாவட்ட நீதிமன்ற https://districts.ecourts.gov.in/karur இணையதளத்தில் பார்வையிடலாம். இவ்வாறு, அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாலாப்பேட்டையில்
வாழைத்தார் விற்பனை
கிருஷ்ணராயபுரம், ஜூன் 9-
லாலாப்பேட்டையில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டையில் வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டி செயல்படுகிறது. இந்த மண்டிக்கு லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், வீரவள்ளி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், நந்தன்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
நேற்று நடந்த ஏலத்தில் பூவன் தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என்று விற்கப்பட்டது. உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்
ரூ.3.41 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
கரூர், ஜூன் 9-
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 3.41 லட்சம் ரூபாய்க்கு நிலக்
கடலை ஏலம் போனது.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகில் சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஏலம் நடைபெறும். கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்த வாரம் நடந்த ஏலத்தில், 45.70 குவிண்டால் எடை கொண்ட, 123 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. கிலோ அதிகபட்சம், 76.80 ரூபாய், குறைந்தபட்சம், 70 ரூபாய், சராசரி, 75.80 ரூபாய்க்கு என மொத்தம், 3 லட்சத்து, 40 ஆயிரத்து, 891-க்கு விற்பனையானது.
அங்காள பரமேஸ்வரி அம்மன்
கோவில் கும்பாபிேஷக விழா
கிருஷ்ணராயபுரம், ஜூன் 9-
மகிளிப்பட்டி கிராமத்தில் உள்ள, அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகிளிப்பட்டி கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, முதல் கால யாக பூஜை தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை துவங்கி காலை, 8:00 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது.
மகிளிப்பட்டி, உடையான்தோட்டம், கணக்கப்பிள்ளையூர், நாச்சியார்புதுார், கருங்காடு, முசிறி, முத்துக்காம்பட்டி, எஸ்.புதுார் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது.
வேங்காம்பட்டி கிராமத்தில்
பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு
கிருஷ்ணராயபுரம், ஜூன் 9-
வேங்காம்பட்டி கிராமத்தில், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை சேகரிக்கும் பணியில், துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, வேங்காம்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள, சாலையில் கிடக்கும் பிளாஸ்டிக்கழிவு குப்பையை சேகரிக்கும் பணியில், துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். அதிகமாக தேங்கியிருந்த பிளாஸ்டிக் கேரி பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர குப்பை முழுவதும் அகற்றிவிட்டு துாய்மை பணி செய்யப்பட்டது.
காவிரி குடிநீர் வழங்க
பொதுமக்கள் கோரிக்கை
குளித்தலை, ஜூன் 9-
குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் உள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், அனைத்து வார்டுகளிலும் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, காவிரி குடிநீர் வழங்கப்பட்டது.
இரண்டாவது வார்டில் கூடலுார் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காவிரி குடிநீர் இதுவரை வழங்காமல் உள்ளது. அனைத்து வார்டுகளுக்கும், சுத்தமான காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த கிராம மக்களுக்கு ஆழ்துளை குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
வழக்கம் போல், இரண்டாவது
வார்டு பகுதிக்கு காவிரி குடிநீர்
வழங்கவேண்டும் என கலெக்டருக்கு, கிராம பொது மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தாய், மகன் மீது தாக்குதல்
இருவர் மீது வழக்குப்பதிவு
குளித்தலை, ஜூன் 9-
கோவில் விழாவின் போது, தாய், மகன் மீது தாக்குதல் நடத்திய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., தெற்குப்பட்டி தென்னகரில் கோவில் திருவிழா நடந்தது. இறுதி நாளான நேற்று முன்தினம் காலை, அதே ஊரை சேர்ந்த அண்ணாவி, 62 என்பவர் தன் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது, மஞ்சள் நீராட்டு விழாவின்போது அதே ஊரைச் சேர்ந்த குணா, கலியமூர்த்தி இருவரும் சாக்கடை நீரை எடுத்து அண்ணாவி வீட்டின் மீது தெளித்தனர். இதை தட்டி கேட்ட அண்ணாவி மனைவி பூமணி, இவருடைய மகன் கணேசன், 35 இருவரையும் குணா, கலியமூர்த்தி சேர்ந்து, கையில் வைத்திருந்த கட்டையால் தலையில் அடித்தனர். மேலும் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்பட்ட பூமணி, கணேசன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அண்ணாவி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து குணா, கலியமூர்த்தி இருவரையும் தேடி வருகின்றனர்.
கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாக
மாறிய கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை
கரூர், ஜூன் 9-
கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஆடு, மாடுகளை
மேய்ச்சலுக்கு விடுவதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும், 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இங்கு, அரசு டவுன் மற்றும் மினி பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இது தவிர சொந்த வாகனங்களிலும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருபவர்கள், அவற்றை தங்களது வீடுகளில் கட்டி வளர்க்காமல் சாலையில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இதனால், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், ஆடு, மாடுகள் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்வதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர். எனவே, கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.