சாய் தபோவனத்தில் வைகாசி
வியாழன் சிறப்பு ஆரத்தி
நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள வள்ளிபுரம் அடுத்த தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், வைகாசி மாதம் நான்காவது வியாழனை முன்னிட்டு சிறப்பு ஆரத்தி மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
நேற்று அதிகாலை, சாய்பாபாவிற்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் என்னும் ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின், பாபாவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. மதியான் ஆரத்தி பாடப்பட்டு, வேதங்கள் முழங்க பாபாவிற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமி
தரிசனம் செய்தனர்.
டூவீலரிலிருந்து விழுந்தவர் பலி
குமாரபாளையம், கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் கணேசன், 62, கூலித்தொழிலாளி. இவர் மே, 19ல் டி.வி.எஸ். மொபட்டில் கோட்டைமேடு அருகே, சர்வீஸ் சாலையில் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் நேற்றுமுன்தினம் இறந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பசு மாட்டை திருடிய
இருவருக்கு காப்பு
எருமப்பட்டியில், மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்த பசு மாட்டை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
எருமப்பட்டி, காந்திரோட்டைசேர்ந்தவர் முருகேசன், 48 விவசாயி. இவர் கடந்த, 7ல் வீட்டின் அருகில் இருந்த மாட்டு கொட்டகையில், பசு மாடு கட்டி வைத்துள்ளார். மறுநாள் பார்த்த போது பசுமாடு காணாமல் போனது. இதையடுத்து, கோணங்கப்பட்டி ரோட்டில் தேடி சென்றுள்ளார். அப்போது எருமப்பட்டி ஜீவாநத்தம் தெருவை சேர்ந்த சந்திரசேகரன், 23, பழனி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன், 19 ஆகியோர் மாட்டை ஓட்டியபடி சென்றனர். முருகேசன் புகார்படி, எருமப்பட்டி போலீசார் விசாரித்து சந்திரசேகரன், விக்னேஷ்வரன் ஆகியோரை கைது செய்ததுடன், பசு பாட்டை பறிமுதல் செய்தனர்.
பள்ளிபாளையம் நகராட்சியை
தரம் உயர்த்த கோரிக்கை
பள்ளிபாளையம், 2003 வரை டவுன் பஞ்., பகுதியாக இருந்தது. 2004ல், மூன்றாம் நிலை நகராட்சி, 2011ல், இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது நகராட்சி பகுதியில் தொழிற்கூடம், வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்து வளர்ந்து வரும் நகரமாக உள்ளது.
கடந்தாண்டு நகர மன்ற கூட்டத்தில், நகராட்சி அருகில் உள்ள ஆலாம்பாளையம் டவுன் பஞ்., மற்றும் சில பஞ்., பகுதிகளை இணைத்து, தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இப்பணி தொய்வு நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் நகராட்சி சேர்மன் செல்வராஜ், நேற்று மாவட்ட கலெக்டரை சந்தித்து தரம் உயர்த்த கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து, பள்ளிபாளையம் நகராட்சி சேர்மன் செல்வராஜ் கூறுகையில்,''நாமக்கல் கலெக்டரை நேரில் சந்தித்து, பள்ளிபாளையம் நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்துள்ளேன்,'' என்றார்.
மின்மாற்றிகளை மாற்ற
மக்கள் நீதி மய்யம் மனு
குமாரபாளையத்தில், மதீனா ஸ்டோர் அருகில் மின்மாற்றி உள்ளது. இதனால் பயணிகள் சாலையை கடக்கும்போதும், வாகனங்கள் செல்லும் போதும் ஒதுங்க இடமின்றி தவித்து வருகின்றனர். இந்த இடத்தில் விபத்துகளும் நடந்துள்ளன. இதேபோல் ஆனங்கூர் பிரிவு சாலையில் உள்ள மின்மாற்றியையும் மாற்றியமைக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்ய மகளிரணி நகர அமைப்பாளர் சித்ரா தலைமையில், திருச்செங்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் திருகுணாவிடம் மனு வழங்கப்பட்டது.
தேங்காய் பருப்பு ஏலம்
ப.வேலுார், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடந்த ஏலத்திற்கு, 11 ஆயிரம் கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, ரூ.79.89, குறைந்தபட்சமாக, ரூ.63.79, சராசரியாக, ரூ.73.70-க்கு ஏலம் போனது. மொத்தம் ஏழு லட்சத்து, 92 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சாலை பணிகள் துவக்க விழா
சேந்தமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட, கொண்டமநாயக்கன்பட்டி பஞ்.,ல், ரூ.1.20 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு திட்டப்பணிகள் துவக்க விழா நடந்தது. அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., பொன்னுசாமி ஆகியோர், கொண்டமநாயக்கன்பட்டியில் ரூ.1.20 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகளை துவக்கி வைத்தனர். யூனியன் சேர்மன் மணிமாலா, பஞ்., தலைவர் வெங்கடேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
மளிகை கடையில் மது விற்ற
தி.மு.க.,கிளை செயலர் கைது
மோகனுார் அருகே, மளிகை கடையில் கள்ளத்தனமாக மது விற்ற, தி.மு.க., கிளை செயலரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.பி.,ராஜேஸ்கண்ணன் உத்தரவின்படி, கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மோகனுார் அடுத்த ஆண்டாபுரம் பகுதியில், மோகனுார் எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும், தி.மு.க, கிளை செயலர் குமரவேல், 42 தன் கடையில், மதுபாட்டில்களை மறைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், மளிகை கடையில் இருந்து குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நெடுஞ்சாலை துறை சார்பில்
12,000 மரக்கன்று நடும்பணி
நெடுஞ்சாலைத்துறை சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, 12,000 மரக்கன்றுகள் நடும்பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும், 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டம் சார்பில், 12,000 மரக்கன்றுகள் நடும் பணியை, திருச்செங்கோடு பயணியர் மாளிகையில் அமைச்சர்கள் நேரு, மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்செங்கோடு எம்.எம்.எல்., ஈஸ்வரன், திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்தில், 1,800 வேம்பு, 1,800 புங்கன், 2,000 வசந்த ராணி மரக்கன்றுகள், 1,700 பாதணி, 1,700 நாவல், 1,500 நீர்மருது, 1,500 அத்தி மரக்கன்றுகள் என மொத்தம், 12,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது. பருவமழைக்கு முன்பாகவே அனைத்து மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திருகுணா, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கௌசல்யா, நகராட்சி கமிஷனர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.