நாமக்கல்: ஆன்லைனில், கடன் வாங்கிய கல்லுாரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் அடுத்த, செல்லப்பா காலனியில் கரட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் குமரன்; லாரி டிரைவர். இவரது மகன் லோகேஷ்வரன், 22. கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் இறுதியாண்டு படிப்பை முடித்து விட்டு, தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், லோகேஷ்வரன் ஆன்லைன் செயலி மூலம், 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதில், 5,000 ரூபாயை திருப்பி செலுத்திய நிலையில், மீதி செலுத்துவதற்கான தவணை தேதி முடிந்ததால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக லோகேஷ்வரனை தொடர்பு கொண்டனர். அவர் முறையாக பதிலளிக்காததால், அவரது பெற்றோரை, கடன் கொடுத்தவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்து போனதால், மனமுடைந்த லோகேஷ்வரன் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின், நாமக்கல் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷ்வரன் மொபைல்போனை கைப்பற்றி, எதற்காக அவர் கடன் வாங்கினார், ரம்மி விளையாட ஏதாவது கடன் வாங்கியுள்ளாரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.