குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஏழு சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில், 200க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இங்கு விசைத்தறி, கைத்தறி ரகங்களுக்கு தேவையான நுால்களுக்கு சாயம் போடப்படுகிறது. இவைகளில் அனுமதி பெற்ற, அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் உள்ளன. அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள், சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்துதான் வெளியேற்ற வேண்டும். இருப்பினும் சிலர்
சுத்திகரிப்பு செய்யாமல், சாயக்கழிவு நீரை அப்படியே காவிரி ஆற்றில் கலக்க விடுகின்றனர்.
இதை தடுக்கும் வகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, சாயப்பட்டறைகளை இடித்தும், மின் இணைப்புகளை துண்டித்தும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று விதிமுறைகளை மீறி செயல்பட்ட நாராயணா நகர், அம்மன் நகர், சுந்தரம் நகர், கம்பன் நகர் ஆகிய இடங்களில் உள்ள ஏழு சாயப்பட்டறைகளை, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் மணிவண்ணன் தலைமையில் சென்ற குழுவினர் இடித்தனர்.
இது குறித்து, சிறு சாயப்பட்டறைகள் சங்க தலைவர் பிரபாகரன் கூறியதாவது: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, கையால் சலவை செய்யும் சிறு சாயப்பட்டறைகளை குறி வைத்து இடித்து வருவது வருத்தத்திற்குரியது. சிறு சாயப்பட்டறைகளை இடித்தால், நகரில் விசைத்தறி பட்டறைகளுக்கு தேவையான நுால்கள் சாயமிட முடியாத நிலைமை ஏற்படும். ஜவுளி உற்பத்தி பாதிக்கும். கழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதாக மிஷின்கள் வைத்துக்கொண்டு, சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.