கஞ்சா, பான்பராக், குட்கா, கூலிப், ஹான்ஸ் போன்ற போதை வஸ்து பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்லூரி முதல் பள்ளி மாணவர்கள் வரை பரவிக் கிடக்கிறது. மாணவர்களை இதில் இருந்து மீட்கவும், தடுக்கவும் வழி சொல்கின்றனர் கோவை மக்கள்.
போதைப்பொருட்களின் வகைகளும், அதன் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, அதற்கேற்ப அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது இளைய சமுதாயத்தை சீரழிக்கிறது. அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-- கோமதி, வீட்டுப்பெண்மணி கடலைக்காரசந்து
பள்ளி, கல்லுாரி அருகே மதுக்கடைகள் உள்ளன. மளிகை கடைகளில் பான்பராக்,குட்கா, ஹான்ஸ், கூலிப் சர்வசாதாரணமாக கிடைக்கிறது. இவற்றை குழந்தைகள் எதிரிலேயே பலரும் பயன்படுத்துகின்றனர். விளம்பரங்களிலும், சினிமாக்களிலும் இது போன்ற காட்சிகள் வருகின்றன. குழந்தைகளை குழந்தைகளாக வாழவிடுங்கள்.
-சாரதாஸ்ரீ, அவிநாசி சாலை
இன்றைய இளைய தலைமுறை போதைக்கு அடிமையாகிப்போனது.மீட்டு நல்வழிப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். அதற்காக அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அது அவர்களது கடமையாகும்.
-புகழேந்தி வீரகேரளம்
நம் சமூகம் போதைப்பொருட்களால் புரையோடிப்போய்விட்டது. அதை சீர்செய்வதென்பது ஓரிரு நாட்களில் நடந்து விடாது. அதற்கான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு அரசின் சமூகநலத்துறை வேகமாக இயங்க வேண்டும். மற்ற துறைகளும் இணைந்தால் தீர்வை எட்டலாம்.
- மரகதம் கடலைக்காரசந்து
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வகுப்பிலேயே, நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதனால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டும். வாழ்க்கை சிதைந்து போகும் என்பதை வெளிப்படையாக உணர்த்த வேண்டும். அதற்கான முயற்சியை கல்விநிறுவனங்கள் எடுக்க வேண்டும்.
- புவனேஸ்வரி, கலெக்டர் அலுவலகம் அருகில்