கோவை;மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து குப்பை குவிக்கப்படும் இடங்கள் கண்டறிப்பட்டு, 'கிரீன் ஸ்பாட்' ஆக மாற்றும் நடவடிக்கையில், மாநகராட்சி இறங்கியுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் தினமும் சேகரமாகும், 1,000 டன் வரையிலான குப்பை வெள்ளலுார் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. இதை குறைக்கும் விதமாக, 22 'வெட் வேஸ்ட்', 11 'டிரை வேஸ்ட்', ஒரு 'இ-வேஸ்ட்' உட்பட, 36 எம்.சி.சி., மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டன.
இதில், 33 மையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதால்,வெள்ளலுார் கிடங்கு செல்லும் குப்பை அளவு, 400-500 டன்களாக குறைந்துள்ளது. அதேசமயம்,ரோடுகளில் குப்பை கொட்டுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
துாய்மை பணியாளர்,குப்பை தொட்டிகள் பற்றாக்குறை என மாநகராட்சியை குறைகூறினாலும்,பொது மக்களிடம் தரம் பிரித்து தராதது போன்ற பொறுப்பற்ற தன்மையும், அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாகிறது.
'துாய்மை பாரதம்' திட்டத்தின்கீழ், குப்பை தொட்டியில்லா கோவையை உருவாக்க, மாநகராட்சி முனைப்பு காட்டிவருகிறது.
அதேசமயம், உரிய திட்டமிடல் இல்லாததால்,சவுரிபாளையம் பிரிவு, முத்தண்ணன் குளம், என பல்வேறு இடங்கள்,குப்பை குவியலின் இடமாக மாறிவிட்டது. இதை தடுக்க, அது போன்ற இடங்களை அடையாளம் கண்டு, மரங்கள் நட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, உக்கடம்புல்லுக்காடு சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அருகே, 600 மரக்கன்றுகள் நடப்பட்டு 'கிரீன் ஸ்பாட்' ஆக மாற்றப்பட்டு வருகிறது.
மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:குப்பை தொடர்ந்து கொட்டப்படும், 33 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இடங்களை பொறுத்து மரம் நடுதல், 'கிரீன் நெட்' கொண்டு மறைத்தல் என, ஒவ்வொரு மாதிரியாக கையாளப்படுகிறது. சமீபத்தில், புல்லுக்காடு பகுதியில் மரங்கள் நட்டுள்ளோம். இதுபோன்ற நடவடிக்கையால், 20 இடங்களில் முற்றிலும் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள, 13 இடங்களில் இந்நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இப்படி, குப்பை கொட்டப்படும் இடங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தி, விதிமீறுவோர் மீது அபராத நடவடிக்கையும் எடுக்க உள்ளோம். பொது மக்கள் ஒத்துழைப்பும் அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.