கேட் வால்வுகள் திருட்டு
காரியாபட்டி: காரியாபட்டி பேரூராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த 2 பித்தளை கேட் வால்வுகள், தண்ணீர் திறந்து விடும் 1 பித்தளை கேட் வால்வையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ. 2 ஆயிரத்து 650. காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இரு குடும்பத்தினர் தகராறு 13 பேர் மீது வழக்கு
காரியாபட்டி: மல்லாங்கிணர் முடியனூரைச் சேர்ந்த முத்துலட்சுமி 38, செல்வி 26 குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளில் பேசி தாக்கி கொண்டனர். மல்லாங்கிணர் போலீசில் முத்துலட்சுமி கொடுத்த புகாரில் ஆறுமுகம், மகன்கள் சஞ்சய்குமார், சிரஞ்சீவி உட்பட 10 பேர் மீதும், முத்துலட்சுமி, உறவினர்கள் மணி, பிரசாத் மீதும் செல்வி புகார் கொடுத்தார். அதன் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பூட்டிய வீட்டில் திருட்டு
விருதுநகர்: அருப்புக்கோட்டை பெரியவள்ளிக்குளம் லட்சுமிபதி நகர் மகாலட்சுமி 41. தனியார் மில்லில் சுகாதார பணியாளரான இவர் கணவருடன் விவாகரத்து ஆகி தனியாக வசித்து வருகிறார். ஜூன் 3ல் வீட்டு மாடிக்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களை விரட்டி விட்ட நிலையில் மகாலட்சுமி அச்சமடைந்து விருதுநகர் அம்பேத்கர் காலனி வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை பெரியவள்ளிக்குளம் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் வெளியில் பிரிட்ஜ் சேதமாகி கிடந்தது. மாடிக்கு செல்லும் தகர கதவு திறந்து கிடந்தது. தகர பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள், ஒன்றரை பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் ஆண் பிணம்
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாத்துரை சிலை பின்புறம் அடையாளம் தெரியாத நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். ரோஸ் நிறத்தில் சட்டையும், கைலியும் நரைத்த தாடியுடன் காணப்பட்டவரை வி.ஏ.ஓ., புகாரின் பேரில் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.