காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் உப்பேரி குளம் தெருவில், கே.வி.கே., நகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும், 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பள்ளி எதிரில் உள்ள சமையல் அறையில், சத்துணவு தயாரிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் உள்ள சமையல் அறைக்கு, இதுநாள் வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும், அருகில் உள்ள வேப்பமரத்தின் கிளையால், சமையல் அறைக்கு போதுமான வெளிச்சம் இல்லாமல் உள்ளது.
இதனால், பல ஆண்டுகளாக, போதுமான வெளிச்சம் இல்லாத சமையல் அறையில், மாணவ - மாணவியருக்கு சத்துணவு சமைக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
சமையல் அறையின் பின்பக்கம் புதர் மண்டியுள்ளதாலும், முன் பக்கம் பெரிய வேப்பமரம் ஒன்று இருப்பதாலும், சமையல் செய்யும்போது, புழு, பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உணவில் விழவும், சமையலர் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, சமையல் அறைக்கு உடனடியாக மின்வசதி வசதி ஏற்படுத்தவும், சூரிய ஒளி வெளிச்சத்திற்கு இடையூறாக உள்ள வேப்பமரத்தின் கிளையை அகற்றவும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.