சென்னை : தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர், தர்மராஜா கோவில்களுக்குச் சொந்தமான, 6.5 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் மீட்கப்பட்டு, சுவாதீனம் பெறப்பட்டது.
சென்னை, தங்கசாலையில் அமைந்துள்ளது, ஏகாம்பரேஸ்வரர் கோவில். இக்கோவிலுக்குச் சொந்தமான, 1,500 சதுர அடி அளவுள்ள கட்டடங்கள், மின்ட் தெரு மற்றும் அக்ரஹாரம் தெருவில் உள்ளன.
இவை, 11 நபர்களுக்கு, வணிக நோக்கத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. ஆனால், இவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்ததோடு, கோவில் முகப்பை மறைத்து, இடத்தை ஆக்கிரமித்து சம்பாதித்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது, சட்டப் பிரிவு, 78ன்படி, அறநிலையத் துறை சென்னை மண்டலம்- - 1 இணை கமிஷனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் உத்தரவுப்படி, கோவில் இடத்தில் இருந்த இவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்பட்டனர்.
இதையடுத்து, உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த இடங்கள் மீட்கப்பட்டு, கோவிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது.
அதேபோல, மின்ட் தெருவிலுள்ள தர்மராஜா கோவிலுக்குச் சொந்தமான, 1,015 சதுர அடி பரப்பளவுள்ள வணிக கட்டடமும், முறையாக வாடகை செலுத்தப்படாததால், சுவாதீனம் பெறப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு, 6.5 கோடி ரூபாய்.