திருக்கழுக்குன்றம், : திருக்கழுக்குன்றம் தாலுகாவில், 'ஜமாபந்தி' எனும் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, மே 30ல் துவங்கி, நேற்று நிறைவடைந்தது.
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசியதாவது:
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததாக, அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்கின்றனர். நிதி இல்லாததால்தான், பெண்கள் உரிமைத் தொகை மட்டும் வழங்கவில்லை. வரும் செப்டம்பர் மாதம், மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
தேர்தல் அறிக்கையில் தெரிவித்த, 525 வாக்குறுதிகளில், 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. தவிர உயர்கல்வி படிக்கும் பெண்கள், மாதம் 1,000 ரூபாய், உதவித் தொகை பெறுகின்றனர். நாட்டில், உயர்கல்வி படித்த பெண்கள் 52.7 சதவீதம் உள்ள ஒரே மாநிலம் தமிழகம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், 105 பேருக்கு, 1.06 கோடி ரூபாய் மதிப்பு இலவச வீட்டு மனை பட்டா உட்பட, பலருக்கும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், திருப்போரூர், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ.,க்கள் பாலாஜி, பாபு, தனி துணை கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.