குன்றத்துார், : குன்றத்துாரில் சேக்கிழார் கோவிலுக்கு சொந்தமான பாலவராயன் குளம், பராமரிப்பின்றியும், குளத்தின் பெரும்பகுதி ஆக்கிரமித்தும் காணப்பட்டது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலந்து மாசடைந்தது.
இதனால், 'குளத்தை மீட்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இந்த நிலையில், கோவில் குளத்தை சீரமைக்கும் பணியை, நகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது. 2.12 கோடி ரூபாயில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் குளத்தை ஆழப்படுத்துவது, கரைகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, குளத்தைச் சுற்றி சுவர் அமைக்கவும், நடைபாதை மற்றும் மின் விளக்குகள் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.