திட்டக்குடி: திட்டக்குடி அருகே குடியிருப்பு பகுதியின் நடுவிலுள்ள மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், ஆவினங்குடி அருகிலுள்ள பழைய கொடிக்களம் பகுதியில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கான மயானம் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் அவர்கள் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்து வந்தனர். தற்போது அப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உருவாகியுள்ளது. இதனால் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக அதிகாரிகளிடம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அடுத்த ஒதியம் கிராமத்தை சேர்ந்த 75 வயது பெண் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய நேற்று காலை ஆவினங்குடியில் வசிக்கும் அந்த சமுதாய மக்கள் மயானத்தில் குழி தோண்டுவதற்கு சென்றனர்.
இதற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பினர். இதையடுத்து திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறந்தவரின் உடலை தற்போதுள்ள மயானத்திலேயே அடக்கம் செய்யவும், வரும் காலத்தில் அவர்களுக்கு ஊரின் வெளியே தரிசு நிலத்தில் இடம் ஒதுக்கித் தரவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டு கலைந்து சென்றனர்.