திண்டிவனம் : 'மேல்பாதி கோவிலை பூட்டிய விவகாரத்தில், அமைச்சர் பொன்முடி பிரச்னையை துாண்டி விட்டு, எம்.பி., ரவிக்குமாரை வைத்து மடை மாற்றி விடுகிறார்' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், பொருளாதாரத்தில் 54வது இடத்தில் இருந்த, இந்தியாவை ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்தவர் பிரதமர் மோடி.
காங்., ஆட்சியில் இருந்த போது, இரண்டு தேசிய கொடி, இரண்டு தேசிய கீதம் என்ற நிலையை சட்டத்தின் மூலம் காஷ்மீரையும், இந்தியாவின் ஒரு பகுதி தான் என இணைத்து, ஒரே நாடு, ஒரே தேசிய கொடி, ஒரே தேசிய கீதம் என்ற நிலையை உருவாக்கினார். ராமர் கோவில் பிரச்னைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டவர்.
காங்., ஆட்சி காலத்தில் ராணுவ தளவாடங்கள், இத்தாலி போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது ராணுவ தளவாடங்கள் 1,941 கோடிக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மேல்பாதி கிராமம், அமைச்சர் பொன்முடிக்கு சொந்த ஊர் போன்றதாகும். அவர் தான் பிரச்னையை துாண்டிவிட்டு, ரவிக்குமார் எம்.பி.,யை வைத்து மடை மாற்றி விடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் உடனிருந்தனர்.