விழுப்புரம் : விழுப்புரம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் கூடுதல் விலைக்கு மது விற்றதாக எழுந்த புகாரில், விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம், மது பாட்டில் வாங்க வந்த ஒருவர், குவார்ட்டர் மது பாட்டிலுக்கு உரிய தொகையான 160 ரூபாய் கொடுத்தார்.
ஆனால், கடை விற்பனையாளர், கூடுதலாக 10 ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு மது வாங்கிய நபர், கூடுதல் தொகை தர முடியாதென, விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மது பெட்டிகள் ஏற்று கூலி, இறக்கு கூலி, இதர செலவினங்கள், கூடுதலாக ஆவதால், பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்க வேண்டியுள்ளது என, விளக்கமளித்த விற்பனையாளர், கூடுதலாக 10 ரூபாய் வாங்கி கொண்டார்.
இந்த உரையாடல் தொடர்பான வீடியோ, நேற்று முன்தினம், சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், முண்டியம்பாக்கம் டாஸ்மாக் கடையில் ஆய்வு நடந்தது. மது பாட்டிலுக்கு கூடுதலான 10 ரூபாய் கட்டணம் வசூலித்த புகார் உறுதி செய்யப்பட்டதால், அந்த கடையின் விற்பனையாளர் கணேசனை, நேற்று சஸ்பெண்ட் செய்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராமு உத்தரவிட்டார்.