உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே சாலையோரம் நின்ற டாடா ஏஸ் வாகனத்தின் மீது அரசு விரைவு பஸ், கூரியர் வாகனம் (வேன்) அடுத்தடுத்து மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 45; டிரைவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, 40, என்பவரது குடும்பத்தினரை கொத்தனார் வேலைக்காக டாடா ஏஸ் வாகனத்தில் காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் சென்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த மேட்டாத்துார் அருகே தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை 6:30 மணியளவில், சென்றபோது மழை பெய்தது. சாலையோரம் வாகனத்தை நிறுத்தி, அதன் மீது தார்ப்பாய் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது மதுரையை சேர்ந்த டிரைவர் சதீஷ், 49, என்பவர் ஓட்டி வந்த மதுரை - சென்னை அரசு விரைவு பஸ் சாலையோரம் நின்றிருந்த டாடா ஏஸ் வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. பின் தொடர்ந்து வந்த கூரியர் வாகனம் அரசு விரைவு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் டாடா ஏஸ் வாகனத்தில் பயணித்த மாரிமுத்து, அவரது மனைவி செல்வி, 38; மகள்கள் சாதனா, 12; ரித்திகா, 8, டிரைவர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரசு விரைவு பஸ் மற்றும் கூரியர் வாகனத்தில் சென்றவர்கள் காயமின்றி தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.