விழுப்புரம் : விழுப்புரம் மேல்பாதி கோவில், வழிபாட்டு பிரச்னையால் சீல் வைக்கப்பட்ட நிலையில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இரு தரப்பினரிடம் விசாரணை நடந்தது.
விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜர் திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த ஏப்., 7ம் தேதி நடந்த தீமிதி திருவிழாவில், இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.
விழுப்புரம் ஆர்.டி.ஓ., மற்றும் கலெக்டர் தலைமையில், 6 முறை அமைதி பேச்சுவார்த்தை நடந்தும், சுமூக தீர்வு எட்டவில்லை. இரு தரப்பு மோதல் உருவாகும் என்பதால், கடந்த 7ம் தேதி கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
இக்கோவில் பிரச்னை தொடர்பாக, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் 9ம் தேதி விசாரணை நடக்க உள்ளதால், இரு தரப்பினரும் ஆஜராகி, எழுத்துப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இரு தரப்புக்கும் (82 பேருக்கு) சம்மன் அனுப்பபப்பட்டது.
இதன்படி, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று காலை 10:30 மணிக்கு விசாரணை தொடங்கியது. ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ், தாசில்தார்கள் வேல்முருகன், சீனுவாசன் முன்னிலை வகித்தனர்.
கோவில் பகுதியில் உள்ள 'ஏ' தரப்பைச் சேர்ந்த 37 பேர் ஆஜராகி, வக்கீல்கள் முன்னிலையில், எழுத்துப்பூர்வமான மனுவை அளித்து, அவர்களது கருத்தை தெரிவித்தனர்.
பின்னர், 'பி' தரப்பை சேர்ந்த 24 பேர், வக்கீல்கள் முன்னிலையில், எழுத்துப்பூர்வமாக மனு அளித்து, கருத்துக்களை தெரிவித்தனர். பிற்பகல் 2:00 மணிக்கு விசாரணை முடிந்தது. ஆர்.டி.ஓ., ரவிச்சந்தின், அவர்களது கருத்துக்களை பதிவு செய்து கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில் 'ஆவணங்களை ஆய்வு செய்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படும் போது, மீண்டும் விசாரணை நடத்தப்படும். விசாரணையின் முடிவில், இறுதி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை கோவில் பகுதியில் தடை உத்தரவு தொடரும்' என்றார். விசாரணையின் போது, வெளி நபர்கள் அனுமதிக்கப்பட வில்லை. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போலீசில் புகார்
திரவுபதி அம்மன் கோவில், சீல் வைத்தது தொடர்பாக, சமூக வலை தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்குமாறு, மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த காந்தி, 40; புகார் அளித்துள்ளார். விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.