விழுப்புரம் : விழுப்புரம் அருகே மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் பிரச்னை தொடர்பாக, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று விசாரணை நடந்தது.
அதில், இரு தரப்பினரும், எழுத்துப் பூர்வமாக அவர்கள் தரப்பு கருத்தை தெரிவித்தனர்.
அதில், 'ஏ' தரப்பினர் தெரிவித்துள்ள கருத்து:
எங்கள் முன்னோர்கள், அவர்களது இடத்தில், குடும்ப வழிபாட்டுக்காக, சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, குலதெய்வமான திரவுபதி அம்மனுக்கு கோவில் கட்டினர். குல வழக்கப்படி வழிபட்டு வருகிறோம்.
எங்கள் வழித்தோன்றல், மக்கள் ஆண்டு தோறும் பணம் வசூலித்து, கோவிலை மேம்படுத்தி திருவிழா நடத்தி வருகிறோம்.
இந்நிலையில், சிலர், அம்மன் வழிபாட்டை தரம் தாழ்த்தி விமர்சித்தனர். அவர்கள், எங்கள் வகையறா கோவில் நிர்வாகத்தை, அபகரிக்கும் நோக்கில், தவறான தகவல் கூறி, அறநிலையத்துறை மூலம், நிர்வாகத்தை பெற முயற்சிக்கின்றனர்.
இப்பிரச்னை, உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், கோவிலுக்கு சீல் வைப்பு சட்ட விரோதம். அதனை திறந்து வழிபட அனுமதிக்க வேண்டும்.
தனி நபருக்கு சொந்தமான கோவில் என்பதால், பிறரை கோவிலுக்குள் அனுமதிப்பது, தனிப்பட்ட விருப்பம், இது தொடர்பாக, நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
இவ்வாறு விளக்கம் அளித்துள்ளனர்.
'பி' தரப்பினர் தெவித்துள்ள கருத்து:
கிராமத்தில் பொதுவாக உள்ள, திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்ற, எங்கள் பகுதி மக்கள் சிலரை, ஒரு தரப்பினர் தாக்கி கோவில் வழிபாட்டு உரிமையை பறித்துள்ளனர். கடந்த 1978 முதல் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் இந்த கோவில் இருந்து வருகிறது. அரசுக்கு சொந்தமான பொது இடத்தில், சாதியின் பெயரால், நுழைய விடாமல் தடுப்பது, சட்டப்படி குற்றமாகும். அனைத்து கோவில்களிலும், வழிபடும் உரிமை அனைவருக்கும் உள்ளது.
அரசுக்கு சொந்தமான கோவிலில், நாங்கள் வழிபாடு செய்ய செல்வது குறித்து, அரசு முடிவு செய்து சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சமூக நல்லிணக்கம் பாதுகாக்க, சமூக நீதியை நிலைநாட்ட ஊரை விட்டு வெளியேறவும், நாங்கள் தயாராக உள்ளோம்.
எனவே, இக்கோவில் நுழைவு சம்பந்தமாக, அரசிலமைப்பு சட்டம் எங்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகளின்படி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விளக்கம் அளித்துள்ளனர்.