சென்னை: பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில் ஓட்டுனர்கள் பணியின்போது, 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய, ரயில்வே வாரியம் தடை விதித்துள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் ஓட்டுனர்கள் பணியின்போது மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு, ஏற்கனவே இருக்கிறது. அதனால் தற்போது, 'புளூடூத்' தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, 'ஸ்மார்ட் வாட்ச்'களை, ஓட்டுனர்கள் பயன்படுத்துவதாக புகார் வந்துள்ளது.
புளூடூத் தொழில்நுட்பத்தில், மொபைல் போனுடன் ஸ்மார்ட் வாட்ச்சை இணைத்து பேசும் வசதி உள்ளது. இது, பணியில் இருக்கும் ரயில் ஓட்டுனர்களின் கவனத்தை சிதறடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ரயில் ஓட்டுனர்கள் பணியின்போது, 'ஸ்மார்ட் வாட்ச்' அணியக் கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரயில் ஓட்டுனர்கள் சிலர் கூறுகையில், 'பணியின்போது மொபைல் போன் பேச தடை இருக்கிறது. அந்த நடைமுறையை பின்பற்றியே, இந்த உத்தரவும் இருப்பதாக பார்க்கிறோம்' என்றனர்.