கரூர்: கரூர் எம்.ஜி., சாலையில், பாதாள சாக்கடை மூடி உடைந்ததால், கழிவு நீர் நேற்று காலை ஆறாக ஓடியது. இதனால் மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.
கரூர் எம்.ஜி., சாலையில் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அப்பகுதியில், பாதாள சாக்கடை கால்வாயின் மேல் மூடி, பல மாதங்களாக உடைந்த நிலையில் இருந்தது.
அதை, சரி செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல மாதங்களாக கோரிக்கை வைத்தனர். ஆனால், கரூர் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல், அலட்சியமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை எம்.ஜி., சாலை பாதாள சாக்கடை கால்வாயின் மேல் பகுதி, மூடியில் இருந்து கழிவு நீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடியது. அப்போது, துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
இதனால், கரூர் மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை கால்வாயின், மூடியை மாற்றி கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டியது அவசியம்.