கரூர்: அரவக்குறிச்சி அருகே, திருமண சாப்பாட்டை சாப்பிட்ட, 16 வட மாநில தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஈச நத்தம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான ஹாலோபிரிக்ஸ் கல் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அதில், 25க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, ஹாலோபிரிக்ஸ் கல் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அருகே, திருமண விழா நடந்தது. அதில், தயாரிக்கப்பட்ட உணவு வட மாநில தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த உணவை நேற்று மதியம், வடமாநில தொழிலாளர்கள் சாப்பிட்டுள்ளனர்.
பிறகு, 'புட் பாய்சன்' காரணமாக, இரண்டு சிறுமிகள், நான்கு பெண்கள் உள்பட, 16 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால், ஈசநத்தம் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.