ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்காக, 34 விடுதிகள் செயல்படுகின்றன.
பள்ளி விடுதிகளாக மாணவர்களுக்கு சிவகிரி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கோபி, சென்னிமலை, வெள்ளோடு, நம்பியூர், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, தாளவாடி, அரச்சலுார், மலையம்பாளையம், அந்தியூர், குருவரெட்டியூர், காவிலிபாளையம் என, 15 இடங்களில் விடுதிகள் உள்ளன.
பள்ளி மாணவியருக்கு, அவல்பூந்துறை, கொடுமுடி, சிவகிரி, பெருந்துறை, அத்தாணி, காவிலிபாளையம், பவானி, குருவரெட்டியூர், மூங்கில்பட்டி, சத்தியமங்கலம், பங்களாபுதுார் என, 11 இடங்களில் விடுதிகள் உள்ளன.
அதுபோல கல்லுாரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஈரோடு, கோபி, பெருந்துறை, வேலம்பாளையம் என, 4 விடுதிகள், மாணவியருக்கு சித்தோடு, கோபி, புன்செய் புளியம்பட்டி, திட்டமலை என, 4 விடுதிகள் உள்ளன. பள்ளி விடுதிகளில், 4 முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியரும், கல்லுாரி விடுதியில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக் மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர். விடுதியில் உணவு, தங்கும் வசதி இலவசம். 10ம் வகுப்பு வரை மாணவ, மாணவியருக்கு தலா, 4 இணை சீருடை வழங்கப்படும்.
விருப்பம் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் வரும், 15க்குள்ளும், கல்லுாரி விடுதிக்கு ஜூலை, 15க்குள்ளும் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் இலங்கை தமிழர்களுக்கு தலா, 5 இடங்கள் வழங்கப்படும்.இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.