திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களில் வீசிய பலத்த காற்று மற்றும் மழைக்கு, 334 ஏக்கர் வாழை சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இழப்பீடு தொகையை விரைந்து வழங்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, பொங்கலுார், உடுமலை, மடத்துக்குளம் பகுதி விவசாயிகள், வாழை பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கேரள சந்தைக்காக, நேந்திரம், ரொபெஸ்டா உள்ளிட்ட ஹைபிரிட் வாழை ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்று மற்றும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், வாழை, பப்பாளி, முருங்கை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் ஏராளமாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக காசிபாளையம், அவிநாசி, முதலிபாளையம், அவிநாசிபாளையம், மடத்துக்குளம், உடுமலை பகுதி வாழை விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வீசிய காற்று மற்றும் மழைக்கு, 250 வாழை விவசாயிகளின் 252 ஏக்கர் பரப்பு வாழை; மே மாதம் இறுதியில் பெய்த மழைக்கு, 89 விவசாயிகளின், 82 ஏக்கர் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்களில் வீசிய பலத்த காற்று மற்றும் கன மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், 334 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 339 வாழை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வருவாய்த்துறையால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பேரிடர் நிவாரண நிதி மூலம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் கருத்துரு அனுப்ப உள்ளது.