வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே ஜாமினில் வந்த தொழிலாளி, கடத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.
வெள்ளகோவில் அருகே சின்னகவுண்டன்வலசை சேர்ந்த கூலி தொழிலாளி மோகனசுந்தரம், 43; குழந்தைகளுடன் மனைவி சில மாதங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டதால், மோகனசுந்தரம் தனது தாயாருடன் வசித்தார்.
மோகனசுந்தரம் குடும்பத்துக்கும், அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி சம்பூர்ணம் குடும்பத்துக்கும் இட பிரச்னை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இதுகுறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகனசுந்தரம், நிபந்தனை ஜாமீனில் கடந்த மாதம், 7ம் தேதி ஜாமினில் வந்தார். நேற்று முன்தினம் முத்துார்-வரட்டுகரை கீழ்பவானி பாசன வாய்க்கால் அருகே மோகனசுந்தரம் பிணமாக கிடந்தார். வெள்ளகோவில் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இது தொடர்பான 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, சம்பூர்ணத்தின் மகன் அன்பு குமார், ௩௫, என்பவரிடம் விசாரித்தனர். இதில் மோகன சுந்தரத்தை காரில் கடத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
மூன்று நாட்களுக்கு முன் மோகனசுந்தரத்துக்கும், சம்பூரணத்துக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சம்பூரணம் வீட்டுக்கு செல்லும் குடிநீர் குழாயை, மோகனசுந்தரம் துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சம்பூரணத்தின் மகன் அன்புகுமார், உறவினர் பிரவீன்குமார், 32; முத்துாரை சேர்ந்த நண்பர்களான சுரேஷ், 36, குப்புராஜ், 40, ஆகியோருடன் சேர்ந்து, மோகனசுந்தரத்தை காரில் கடத்தி சென்றுள்ளனர். முத்துாரில் ஒரு லேத் பட்டறையில் வைத்து இரும்பு கம்பியால் தாக்கியதில், அவர் இறந்துள்ளார். இதையடுத்து கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் சடலத்தை போட்டு சென்றுள்ளனர். கொலை வழக்கு பதிந்து அன்புகுமார் கைது செய்யப்பட்டார். மற்ற மூவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர்.