திருப்பூர்: மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள். இதுவரை, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் 13 பேர்; மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி கவுன்சிலர் ஏழு பேர் என, 20 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
மாவட்ட ஊராட்சிக்கு, 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளநிலையில், இதுவரை, கூடுதலாக ஐந்து பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளநிலையில், இதுவரை ஏழு பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று மனுதாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. கலெக்டர் அலுவலக அறை எண்: 2020 ல் வேட்புமனுக்கள் பெறப்பட்டுவருகிறது; பிற்பகல் 3:00 மணிக்குள் வேட்புமனுக்களை அளிக்கவேண்டும். வரும் 12ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. வரும் 14ம் தேதி வரை வேட்பு மனு வாபஸ்க்கு அவகாசம் அளிக்கப்படுகிறது.
ஒதுக்கப்பட்டதைவிட கூடுதல் எண்ணிக்கையில் கவுன்சிலர்கள் போட்டியிடும்பட்சத்தில், ஓட்டுப்பதிவு நடத்தி, உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.