சிவகங்கை,-சிவகங்கை மாவட்ட திட்டக்குழு தேர்தலில் ஊரகப்பகுதிக்கு 9 உறுப்பினருக்கு 9 பேரும், நகர் பகுதிக்கு 3 உறுப்பினருக்கு 7 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மாவட்ட திட்டக்குழு உறுப்பினருக்கான தேர்தல்ஜூன் 23ல் நடக்கவுள்ளது. 16 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 9 உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இருந்து 3 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வேட்பு மனுதாக்கலுக்கு கடைசிநாளான நேற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் இருந்து 9 பேரும், நகர்ப்புற பகுதியில் இருந்து 7 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுஉள்ளன. இந்த வேட்பு மனுக்கள் ஜூன் 12ல் பரிசீலனை காலை 11:00 மணிக்கு நடக்கவுள்ளது.
வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு அறிவிப்பினை வேட்பாளரோ அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட முன் மொழிபவரால் தேர்தல்நடத்தும் அலுவலரிடம், உதவி தேர்தல் அலுவலரிடம் ஜூன் 14 மதியம் 3:00 மணிக்குள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வழங்கலாம்.
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 23 காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை மாவட்ட ஊராட்சி வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடக்கும். அன்றே ஓட்டு எண்ணிக்கை நடத்தி வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பு செய்யப்படும்.
வெற்றி பெற்றவர்கள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக ஜூன் 28 அன்று பதவியேற்பார்கள்.தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் முடியும் வரை திட்டக்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள், என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 9 பேர் தேர்வுக்கு 9 பேர் மட்டுமேமனு செய்துள்ளதால் இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான முறையான அறிவிப்பு வேட்பு மனு பரிசீலனை நிறைவு நாளில் தெரியவரும்.