சிவகங்கை-சிவகங்கையில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 66 வழக்குகளில் 1.41 கோடி ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய சட்டப்பணிகள்ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டத்தில் 2 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள்,சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து, வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி ஜி. முத்துக்குமரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி என்.செந்தில்முரளி, வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர்.
மக்கள் நீதி மன்றங்களில் 2 குற்ற வழக்குகளும், 65 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 19 குடும்பப்பிரச்னை வழக்குகளும், என மொத்தம் 122 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 19 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு 85 லட்சத்து 28 ஆயிரத்து 346 ரூபாய் வழக்காடிகளுக்கு கிடைத்தது.
வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகள் 305 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 47 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 56 லட்சத்து 50 ஆயிரத்து 500 ரூபாய் வரை வங்கிகளுக்கு வரவானது.
ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், தன்னார்வ சட்டப் பணியாளர்கள் செய்திருந்தனர்.