மணலியில் தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் மாநகராட்சியினரால் இடித்து அகற்றப்பட்டது.
திருவொற்றியூர், ஜூன் 11-
மணலியில் தனியார் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த, 80 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.
மணலி மண்டலம் 18வது வார்டு, சி.பி.சி.எல்., நகர் அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனம், மயானம், வாய்க்கால் மற்றும் வண்டிப்பாதை நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்த புகாரையடுத்து, அதிகாரிகள் வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ஆக்கிரமிப்பிற்குள்ளான நிலங்களை மீட்க உத்தரவிட்டார்.
உத்தரவின்படி, மணலி மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராசு, உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் கவிதா ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று காலை ஜே.சி.பி., இயந்திரம் உள்ளிட்டவற்றுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக சுற்றுச்சுவரை இடித்து தள்ளி, 3.3 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.
இந்த நிலத்தின் மதிப்பு, 80 கோடி ரூபாய்.
மீட்கப்பட்ட இடத்தில் 30 அடி அகலத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.