மீஞ்சூர், மீஞ்சூர் -- வல்லுார் இடையேயான மாநில நெடுஞ்சாலை, இருவழிச் சாலையாக அமைந்து உள்ளது.
இந்த சாலை வழியாக காட்டுப்பள்ளியில் உள்ள, கப்பல் கட்டும் நிறுவனம், அத்திப்பட்டில் உள்ள எரிவாயு முனையங்கள், நிலக்கரி கையாளும் நிறுவனம், சாம்பல் கழிவுகள் கிடங்கு என, பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு, தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் பயணிக்கின்றன.
மீஞ்சூர் - -வண்டலுார் வெளிவட்ட சாலை, பொன்னேரி- - திருவொற்றியூர் சாலை ஆகியவற்றின் வழியாக வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து துறைமுகங்களுக்கு வந்து செல்லும் வாகனங்களும், இந்த சாலையில் பயணிக்கின்றன.
தொடர் வாகன போக்குவரத்து உள்ள மீஞ்சூர் - - வல்லுார் இடையோன, 2கி.மீ., சாலை சேதம் அடைந்து உள்ளது.
மீஞ்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில் தொடங்கி, ரமணா நகர், புங்கம்பேடு, பட்டமந்திரி, வல்லுார் வரை சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
சாலையில் உள்ள பள்ளங்களை மூடுவதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் கொட்டிய சரளைக் கற்கள் மற்றும் 'எம் சாண்ட்' ஆகியவற்றில் இருந்து புழுதி பறக்கிறது.
சாலையோரங்களில் கடை வைத்திருப்பவர்களும், குடியிருப்புவாசிகளும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
ஒரு வாரத்தில் இந்த பகுதியில், 3 சாலை விபத்துகள் ஏற்பட்டு, கர்ப்பிணி பெண் உட்பட இருவர் உயிரிழந்து உள்ளனர்.
சாலையை சீரமைக்க கோரி, வியாபாரிகள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் விமோசனம் இன்றி உள்ளது. விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், மீஞ்சூர் - வல்லுார் இடையேயான சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.