சோழிங்கநல்லுார், குடிநீர் வாரியம் சார்பில், ஒவ்வொரு மாதமும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், அந்தந்த மண்டல பகுதி பொறியாளர் அலுவலகத்தில், வாரிய கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் நடைபெறும்.
இதில், குடிநீர், கழிவுநீர் பிரச்னை, வரி, கட்டணம் சந்தேகங்கள், புதிய இணைப்பு கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், மழைநீர் சேகரிப்பு, பராமரிப்பு தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்படும். பொதுமக்கள் மனு கொடுத்து, நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண்பர்.
சோழிங்கநல்லுார் குடிநீர் வாரிய அலுவலகத்தில் நேற்று நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், நீலாங்கரை, செம்மஞ்சேரி பகுதியில் இருந்து, நலச்சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூடினர்.
காலை, 10:00 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டம், 11:45 மணி வரை துவங்கவில்லை. அங்குள்ள ஊழியர்கள் முறையான பதிலும் கூறவில்லை. வெளியே காத்திருந்தவர்கள், சரமாரியாக கேள்வி எழுப்பியதை அடுத்து, பகுதி பொறியாளர் அலுவலக அறையில் அனைவரையும் அமர வைத்தனர்.
ஆனால், கூட்டத்தை நடத்த கண்காணிப்பு பொறியாளர், பகுதி பொறியாளர், உதவி பகுதி பொறியாளர்கள் இல்லை.
அவர்கள், மொபைல் போனில் தொடர்பு கொண்டும் பேசவில்லை. பொறுமை இழந்த மக்கள், அங்கிருந்த ஊழியர்களிடம், 'எதற்கு குறை தீர்க்கும் கூட்டம் என அறிவிப்பு கொடுத்தீர்கள்?' என, கேள்வி எழுப்பினர்.
பின், சில வார்டு இளநிலை பொறியாளர்களை வரவழைத்து, பொதுமக்கள் வைத்திருந்த மனுக்களை பெற்றுக் கொண்டனர். அவர்கள் கேள்விக்கு பதில் கூறவில்லை.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
குடிநீர் இணைப்பு, கழிவுநீர் கலப்பு, கட்டணம் தொடர்பாக மனு அளித்தும், உரிய பதில் கிடைக்காததால், குறைதீர்க்கும் கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என, நம்பி வந்தோம். கூட்டம் நடத்தும் அதிகாரிகள் இல்லை. உரிய பதிலும் கூறவில்லை. ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ''நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், எங்கள் துறையின் கூடுதல் தலைமை செயலர் ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிக்காக அதிகாரிகளும் உடன் சென்றிருந்ததால், கூட்டத்துக்கு வர முடியவில்லை,'' என்றனர்.