மதுரை: மதுரையைச் சேர்ந்த உண்டியல்திருடனை, அவர் அணிந்த குளியல் துண்டை துருப்பு சீட்டாக வைத்து போலீசார் பிடித்தனர்.
கோவை, டவுன் ஹால், கோணியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டது.
இதே போல, திண்டுக்கல், உடுமலை, பழநி என, பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து உண்டியல் திருட்டுநடந்தது.
இதனால் உண்டியல்திருடனை பிடிக்க, கோவை போலீசார் தனிப்படை அமைத்தனர்.
கோவை உண்டியல் திருட்டு சம்பந்தமாக கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்ததில், கழுத்தில் குளியல்துண்டை போட்டுக் கொண்டு, சற்று கால் சாய்த்து நடந்து வரும் ஒருவர் சுவர் ஏறி தப்பிச் செல்வது தெரிந்தது.
அந்த நபர், கோவை, சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் நள்ளிரவு 2:30 மணிக்கு மதுரை பஸ்சில் சென்றது கேமராவில் பதிவானது.
போலீசார், அதே போல் பஸ்சில் பயணித்து, வழியில் உள்ள நிறுத்தங்களில் கேமரா பதிவுகளை பார்த்தனர்.
இதில், மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் அந்த நபர் இறங்கியதும், தேனி பஸ்சில் சென்றதும் தெரிந்தது.
துண்டையும், சாய்ந்த நடையையும் அடையாளமாக வைத்து போலீசார் விசாரித்துச் சென்றதில், இறுதியில், தேனியில் இருந்து மதுரை திரும்பி, கோவையில் மீண்டும் உண்டியல் திருட்டுக்கு வந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர், திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் சதீஷ், 32, எனத் தெரிந்தது. கோவை சிங்காநல்லுாரில் போலீசார் அவரை கைது செய்தனர்.