ஸ்ரீவில்லிபுத்தூர் : புண்ணிய சிவ ஸ்தலமான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மலையேறும் போது இறந்தால் அதுதொடர்பாக மதுரை மாவட்டம் சாப்டூர் போலீசில் வழக்கு பதிவு செய்வதுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் இறந்தவர் உடலை பெற உறவினர்கள் ஊர், ஊராக அலையும் அவலம் உள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் சாப்டூர் அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சாப்டூர் வாழைத்தோப்பு வழியாகவும், ஆண்டிபட்டி வருசநாடு வழியாகவும் செல்ல மலைப்பாதைகள் இருந்தாலும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாக செல்லும் பாதையில் பக்தர்கள் செல்கின்றனர். இப்பாதையில் மலையேறுவதே மிகவும் கடினமற்றது என்பதால் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பல்லாயிரம் பக்தர்கள் இப்பாதை வழியாக சென்று தரிசனம் செய்து திரும்புகின்றனர்.
பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். வெளிநாட்டு பயணிகளும் அவ்வப்போது வருகின்றனர்.
40 வயதை கடந்தவர்கள் மலை ஏறும்போது மூச்சுத்திணறியும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழப்பது அவ்வப்போது நடக்கிறது.
கோயிலின் நுழைவுப்பகுதி வத்திராயிருப்பு போலீஸ் எல்லையிலும், மலைப்பாதை சாப்டூர் போலீஸ் நிலைய எல்லையிலும் இருப்பதால் மலையில் உயிரிழக்கும் பக்தர்கள் உடல்களை சாப்டூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்.
உடலை பெற உறவினர்கள் முதலில் தாணிப்பாறை மலை அடிவாரம் வருகின்றனர். அங்கிருந்து சாப்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அங்கிருந்து இறந்தவர் உடலை பெற உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
தாணிப்பாறை வழிப்பாதையில் உயிரிழக்கும் பக்தர்கள் உடலை உறவினர்கள் எளிதில் பெற வசதியாக வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாப்டூர் வாழைத்தோப்பு வழியாக செல்லும் வழியில் உயிரிழப்பு ஏற்பட்டால் சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பேரையூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யவும் உத்தரவிட வேண்டும். ஆண்டிப்பட்டி வருஷநாடு மலைப்பாதை வழியில் உயிரிழந்தால் வருசநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இதுதொடர்பாக மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட போலீஸ், வனம், மருத்துவம், அறநிலையத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பக்தர்களின் எதிர்பார்க்கின்றனர்.